Enable Javscript for better performance
கீழ் கோத்தகிரியில் ஒரே நாளில் இருவர் கொலை: குடிபோதை ஆசாமிகள் இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கீழ் கோத்தகிரியில் ஒரே நாளில் இருவர் கொலை: குடிபோதை ஆசாமிகள் இருவர் கைது

    By DIN  |   Published on : 25th September 2019 06:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீலகிரி மாவட்டம்,  கீழ் கோத்தகிரி பகுதியில் இருவேறு சம்பவங்களில் குடிபோதையில் ஒரே நாளில் நடைபெற்ற இரண்டு கொலைகளால் அப்பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது. 
    நீலகிரி  மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கீழ்கோத்தகிரி,  அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விசாலாட்சி (66). இவர் தேனாடு பஞ்சாயத்தில் தற்காலிக துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவருடன் அண்ணன் மகன் மனோஜ் (45) தங்கி வந்தார். 
    மனோஜுக்கு திருமணமாகி முதல் மனைவி இறந்துவிட்டார். இரண்டாவது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில், குடிபோதையில் வீட்டுக்கு வந்த மனோஜுக்கும் விசாலாட்சிக்கும் இடையே திங்கள்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.
    இதில் கோபமடைந்த மனோஜ் தாக்கியதில் படுகாயமடைந்த விசாலாட்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை மறைக்கவும், தற்கொலையாக மாற்றவும் அவரது உடலுக்கு மனோஜ் தீ வைத்துள்ளார். 
    இதனால், வீட்டிலிருந்து அதிக அளவில் புகை வந்ததால் அருகிலிருந்தவர்கள் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் மனோஜைக் கைது விசாரணை நடத்தி வருகின்றனர். 
    மற்றொரு சம்பவம்: கீழ்கோத்தகிரி அருகே உள்ள நீர்கண்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (80). இவர் கோழிக் கடை நடத்தி வந்தார். இவரது மகன் சின்னபாண்டி (40 ) மதுவுக்கு அடிமையானதால் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
    இதனால், தந்தை மகனுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. குடிபோதையில் சின்னபாண்டி அடிக்கடி தகராறு செய்து வந்ததால் அவரது மனைவி தாய் வீட்டுக்கும், சின்னபாண்டியின் தாய் மகள் வீட்டுக்கும் சென்றுவிட்டனர்.
    இந்நிலையில், குடிபோதையில் வீட்டுக்கு வந்த சின்னபாண்டிக்கும் தந்தைக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சின்னபாண்டி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பாண்டியன் உயிரிழந்தார்.
    இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் சோலூர்மட்டம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பாண்டியனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து சின்னபாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai