உதகை-மேட்டுப்பாளையம் இடையே அக்டோபர் 5 முதல் சிறப்பு மலை ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மலை ரயிலுக்கு தொடர்ந்து அதிகரித்து வரும் வரவேற்பையும், பண்டிகைக் காலங்களையும் கருத்தில் கொண்டு அக்டோபர் 5 ஆம் தேதி முதல் டிசம்பர் 29 ஆம் தேதி வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்

நீலகிரி மலை ரயிலுக்கு தொடர்ந்து அதிகரித்து வரும் வரவேற்பையும், பண்டிகைக் காலங்களையும் கருத்தில் கொண்டு அக்டோபர் 5 ஆம் தேதி முதல் டிசம்பர் 29 ஆம் தேதி வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்புக் கட்டணத்தில் மலை ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பாக தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
நீலகிரி மலை ரயிலில் சிறப்புக் கட்டணத்தில் மலை ரயில் சேவை மேட்டுப்பாளையத்தில் இருந்து அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த சிறப்பு ரயில் சேவை அனைத்து சனிக்கிழமைகளிலும் டிசம்பர் 28 ஆம் தேதி வரை 13 வாரங்களுக்கு இயக்கப்படும். அதேபோல, அக்டோபர் 6 ஆம் தேதி உதகையில் இருந்து தொடங்கும் சிறப்பு மலை ரயில் சேவை டிசம்பர் 29 ஆம் தேதி வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடர்ந்து 13 வாரங்களுக்கு இயக்கப்படும். 
ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு மலை ரயில் காலை 9.28 மணிக்கு கல்லாறு ரயில் நிலையத்தைச் சென்றடையும், அங்கிருந்து காலை 9.35 மணிக்கு புறப்பட்டு 10.46 மணிக்கு  ஹில்குரோவ் ரயில் நிலையத்தையும், 12.30 மணிக்கு குன்னூர் ரயில் நிலையத்தையும் சென்றடையும், அங்கிருந்து 12.55 மணிக்கு புறப்பட்டு 1.05 மணிக்கு வெலிங்டன் நிலையத்தையும், 1.18 மணிக்கு அருவங்காடு ரயில் நிலையத்தையும், 1.40 மணிக்கு கேத்தி ரயில் நிலையத்தையும், 2.13 மணிக்கு லவ்டேல் நிலையத்தையும், 2.25 மணிக்கு உதகை ரயில் நிலையத்தையும் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் உதகை ரயில் நிலையத்தில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்படும் ரயில் காலை 11.40 மணிக்கு லவ்டேல் ரயில் நிலையத்தையும், 12 மணிக்கு கேத்தி ரயில் நிலையத்தையும், 12.25 மணிக்கு அருவங்காடு ரயில் நிலையத்தையும், 12.45 மணிக்கு வெலிங்டன் ரயில் நிலையத்தையும், 1 மணிக்கு குன்னூர் ரயில் நிலையத்தையும் சென்றடையும்.
குன்னூரிலிருந்து பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு 2.40 மணிக்கு  ஹில்குரோவ் ரயில் நிலையத்தையும், 3.50 மணிக்கு கல்லாறு ரயில் நிலையத்தையும், மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.   4 பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ள சிறப்பு ரயிலில் முதல் வகுப்பில் 72 இருக்கைகளும், இரண்டாம் வகுப்பில் 100 இருக்கைகளும் என மொத்தம் 172 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு மலை ரயிலில் பயணிக்க உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்குச் செல்ல முதல் வகுப்புக்கு ரூ.1,450, இரண்டாம் வகுப்புக்கு ரூ.1,050 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்குச் செல்ல முதல் வகுப்புக்கு ரூ.1,100, இரண்டாம் வகுப்புக்கு ரூ.800 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதகையில் இருந்து குன்னூருக்கு பயணிக்க முதல் வகுப்புக்கு ரூ.550, இரண்டாம் வகுப்புக்கு ரூ.450 கட்டணங்கள் ஆகும். 
இந்தக் கட்டணத்துடன் ஜிஎஸ்டி தனியாக செலுத்த வேண்டும். மேலும், மலை ரயிலில் பயணிக்கும் அனைவருக்கும் தலா ரூ.200 மதிப்பிலான அன்பளிப்புகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com