அரசு நிதி உதவி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதால்  காந்தி சிலையை கடந்த 2 ஆண்டுகளாக பராமரித்து வரும் மத நல்லிணக்க அமைதிக் குழு

உதகையிலுள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலை, மணி மண்டபத்தைப் பராமரிப்பதற்கு அரசுத் தரப்பில் நிதியில்லை

உதகையிலுள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலை, மணி மண்டபத்தைப் பராமரிப்பதற்கு அரசுத் தரப்பில் நிதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதை தொண்டு நிறுவனமே பராமரித்து வருகிறது.
உதகையில் சேரிங்கிராஸ் பகுதியில் மகாத்மா காந்தியின் மார்பளவிலான உருவச்சிலையும், அச்சிலையைச் சுற்றிலும் சிறிய மணி  மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் பராமரிப்புப் பணிகளைப் பொதுப் பணித் துறை, நகராட்சி நிர்வாகத்தினர் செய்து வந்தனர்.  ஆண்டுதோறும் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினம், நினைவு தினம், சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களிலும் இச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. முக்கிய விருந்தினர்கள், முக்கிய பிரமுகர்கள் உதகைக்கு வரும்போதெல்லாம் மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னரே  தங்களது நிகழ்ச்சிகளை தொடங்குவர். அப்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப் பணித் துறையின் சார்பில் தேவையான ஏற்பாடுகள் செய்து 
தரப்படும். 
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மகாத்மா காந்தியின் உருவச்சிலை பராமரிப்பு  மணி மண்டபத்தைத் தூய்மைப்படுத்தும் பணிகளில் நீலகிரி மாவட்ட மத நல்லிணக்க அமைதிக் குழுவினர் ஈடுபட்டு வருவதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர். மகாத்மா காந்தியின்  உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும் பகுதி மிகக் குறுகலாக இருப்பதால் அதை விரிவுபடுத்த தங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென பொதுப் பணித் துறையினரிடம் மத நல்லிணக்க அமைதிக் குழுவினர் அனுமதி கேட்டதற்கு, அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. இதுதொடர்பாக பொதுப் பணித் துறையினர்தான் முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
மகாத்மா காந்தியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடவுள்ள இச்சூழலில் உதகையிலுள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலை, மணி மண்டபத்தைப் பராமரிப்பதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளாமல் தனியார் அமைப்பினரிடம் ஒப்படைத்துள்ளது பெரும் வருத்ததத்தை ஏற்படுத்தியுள்ளதாக உதகை நகர மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com