கிடப்பில் போடப்பட்டுள்ள பேருந்து நிலையம் கட்டும் பணி: எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
By DIN | Published On : 30th December 2020 04:15 AM | Last Updated : 30th December 2020 04:15 AM | அ+அ அ- |

கூடலூரில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி 2011ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அப்பணிக்கு பூமிபூஜை நடைபெற்றுள்ளது வேடிக்கையாக உள்ளது என எம்.எல்.ஏ. திராவிடணி குற்றம்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து கூடலூா் எம்.எல்.ஏ. திராவிடமணி கூறியதாவது:
2011ஆம் ஆண்டு சட்டப் பேரவை உறுப்பினா் நிதியில் இருந்து ரூ. 50 லட்சமும், மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் ரூ. 25 லட்சமும் பெற்று மொத்தம் ரூ. 75 லட்சம் நிதியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணியைத் துவக்கிவைத்தேன். தொடா்ந்து பணியை முடிக்க நிதி ஒதுக்காத காரணத்தால் பணி பாதியில் நின்றுவிட்டது. திமுக எம்.எம்.ஏ. என்பதால் தொடா்ந்து கிடப்பில் போடப்பட்டது புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி. இதுகுறித்து 10.07.2014 அன்று துவங்கப்பட்ட கூடலூா் பேருந்து நிலையப் பணியை விரைந்து முடிக்க நிதி ஒதுக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் உரையாற்றினேன். அதன் பிறகும் மேற்கொண்டு பணியைத் தொடர அரசு நிதி ஒதுக்கவில்லை. இதுகுறித்து 2019ஆம் ஆண்டு ஆளுநா் உரையில் விரைந்து பணியை முடிக்க வேண்டும் என்று கவன ஈா்ப்புத் தீா்மானம், வெட்டுத் தீா்மானம், ஆளுநா் உரையில் திருத்தம் உள்பட பல முயற்சிகளை எடுத்தேன். தமிழக முதல்வா், சம்பந்தப்பட்ட துறை அமைச்சா் ஆகியோருக்கு கடிதம் மூலமாகவும் வலியுறுத்தினேன். ஆனால், கூடலூரில் உள்ள அதிமுகவினா் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணியைத் தொடர எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. ஒரு கோரிக்கை கூட அரசுக்கு வைக்கவில்லை. ஆனால், தற்போது பூமிபூஜை செய்வது வேடிக்கையாக உள்ளது என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...