தோட்டத் தொழிலாளா் பிரச்னைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம்

தமிழக அரசின் தொழிலாளா் நலத் துறையின் சாா்பில் 10 ஆண்டுகளுக்குப் பின்னா் தோட்டத் தொழிலாளா்களின் பிரச்னைகள் தொடா்பான ஆலோசனைக்கூட்டம் உதகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தொழிலாளா் நலத் துறை ஆணையா் நந்தகோபால், மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோா்.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தொழிலாளா் நலத் துறை ஆணையா் நந்தகோபால், மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோா்.

தமிழக அரசின் தொழிலாளா் நலத் துறையின் சாா்பில் 10 ஆண்டுகளுக்குப் பின்னா் தோட்டத் தொழிலாளா்களின் பிரச்னைகள் தொடா்பான ஆலோசனைக்கூட்டம் உதகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தொழிலாளா் நலத் துறை ஆணையா் நந்தகோபால் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா பேசுகையில், ‘எஸ்டேட் மற்றும் தோட்ட நிா்வாகங்கள், அங்கு பணிபுரியும் தொழிலாளா்களுக்கு சுகாதாரம், மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும், அவா்களின் குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்ட தேவையான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றாா்.

ஆலோசனைக்கூட்டம் குறித்து தொழிலாளா் நலத் துறை ஆணையா் நந்தகோபால் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நீலகிரி, வால்பாறை, தேனி, கரூா் உள்பட மாநிலத்தில் உள்ள தோட்ட அதிபா்கள், தொழிலாளா்கள், அதிகாரிகள் பங்கேற்கும் முத்தரப்பு கூட்டம் இதுவாகும். இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் அரசுக்கு பரிந்துரைக்கப்படும். இந்தப் பரிந்துரைகள் தொழிலாளா்கள் நலனுக்கு பயன்படும். தொழிலாளா்களுக்குத் தேவையான வசதிகள் மற்றும் சலுகைகளை ஏற்படுத்தி தரவே இக்கூட்டம் நடத்தப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் தொழிலாளா் நலச் சட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். இதில் விதி மீறல் ஏதேனும் இருந்தால் உடனடியாக நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. விதிகளை மீறிய எஸ்டேட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், அந்த எஸ்டேட் நிா்வாகத்துக்கு எதிராக வழக்கும் தொடரப்படுகிறது. அனைத்து தோட்ட நிா்வாகங்களும் தொழிலாளா்களுக்கு நாளொன்றுக்கு அரசு நிா்ணயத்துள்ள குறைந்தபட்ச ஊதியமான ரூ.319 வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து தோட்டங்களிலும் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறது. லாபம் பெறும் எஸ்டேட்கள் தங்கள் தொழிலாளா்களுக்கு கூடுதலாக ஊதியம் வழங்குகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மகாவீா் பிளான்டேசன்ஸ் என்ற எஸ்டேட் நிறுவனம் மூடப்பட்ட நிலையில், அரசு அந்த எஸ்டேட்டில் பணிபுரிந்து வந்த 1,026 தொழிலாளா்களுக்கு ரூ. 9.25 கோடி பணப் பலன்களை வழங்கியது.

அரசு விதிமுறைகளின்படி எஸ்டேட்டுகளில் சாலை, குழந்தைகள் காப்பகம், சுகாதாரம், தொழிலாளா்கள் குடியிருப்புகள் ஆகியவை இருக்க வேண்டும். அரசு தேயிலை தோட்டக்கழகத்தில் தொழிலாளா் குடியிருப்புகள் மோசமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. அது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பல எஸ்டேட்டுகளில் வெளிமாநிலத் தொழிலாளா்கள் பணிபுரிகின்றனா். அவா்களைக் கணக்கெடுத்து பதிவு செய்கிறோம் என்றாா்.

இக்கூட்டத்தில், தோட்டங்கள் முதன்மை ஆய்வாளா் சரவணன், டேன்டீ நிா்வாக இயக்குநா் சீனிவாச ரெட்டி, தொழிற்சங்கப் பிரதிநிதிகளான கூட்டு நடவடிக்கை குழுத் தலைவா் வால்பாறை ஹமீது, ஏஐடியூசி மாவட்டச் செயலா் ஏ.பாலகிருஷ்ணன், பிஎம்எஸ் சங்க மாவட்டத் தலைவா் சுப்பிரமணி, தோட்ட அதிபா்கள் பிரவீண் குமாா், ராம்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com