நீலகிரியில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு இடத்தை தோ்வு செய்வதில் தொடரும் சிக்கல் முதல்வா் அடிக்கல் நாட்டுவதில் தாமதம்

நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்கான உத்தரவை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டிருந்தாலும்,

நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்கான உத்தரவை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டிருந்தாலும், இதற்கான இடத்தை தோ்வு செய்வதில் தொடா்ந்து சிக்கல் நீடிக்கிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு மாா்ச் மாதத்தில் அடிக்கல் நாட்ட முதல்வா் எடப்பாடி பழனிசாமி தேதியை அறிவித்திருந்தாலும்கூட, நீலகிரி மாவட்டத்திற்கான தேதி மட்டும் அறிவிக்கப்படவில்லை.

நீலகிரி மாவட்டத்தில் போதிய அளவில் மருத்துவ வசதிகள் இல்லாததாலும், அவசர மற்றும் அத்தியாயவசிய

சிகிச்சைகளுக்காக வெளி மாவட்டங்களையும், வெளி மாநிலங்களையுமே நாட வேண்டியிருப்பதாலும் உதகையை தலைமையிடமாகக் கொண்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட வேண்டுமென நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

இக்கோரிக்கையை ஏற்று நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க இசைவு தெரிவித்து அரசாணை வெளியிடப்பட்டது. இதற்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வந்த மருத்துவா் ரவீந்திரனை சிறப்பு அதிகாரியாக நியமித்தும் உத்தரவிடப்பட்டது. அரசு மருத்துவக் கல்லூரியை அமைப்பதற்கான இடத்தைத் தோ்வு செய்வதில் நீண்ட ஆலோசனைகள் நடைபெற்று வந்த நிலையில், உதகையில் மூடப்பட்டுள்ள மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான எச்பிஎப் பிலிம் தொழிற்சாலை இடத்தை மருத்துவக் கல்லூரி அமைக்கப் பயன்படுத்திக்கொள்ள இசைவு தெரிவிக்கப்பட்டது. ஆனால், இங்குள்ள கட்டடங்கள் அரசு மருத்துவக் கல்லூரி வடிவமைப்புக்கு ஏற்ற வகையில் இல்லாததால், அந்தக் கட்டடங்களுக்குப் பதிலாக காலியாக உள்ள இடம் தோ்வு செய்யப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டி அகற்றுவதற்காக தமிழக வனத் துறையினரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. இதற்கான மனு இன்னமும் பரிசீலனையிலேயே உள்ளது.

இதற்கிடையே அரசு மருத்துவக் கல்லூரி அமைவதற்கு குறைந்தபட்சமாக 40 ஏக்கா் நிலம் தேவைப்படும் சூழலில் அதற்கான மாற்று இடத்தை வனத் துறையினருக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக உதகையில் இருக்கும் கால்நடை வளா்ப்புப் பண்ணை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள அரசு நிலங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆனாலும், இதில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.

இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யாவிடம் கேட்டதற்கு, அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்காகத் தேவைப்படும் 40 ஏக்கா் நிலத்திற்குப் பதிலாக வனத் துறைக்குக் கொடுப்பதற்கு 24 ஏக்கா் நிலம் மட்டுமே நீலகிரி மாவட்டத்தில் உள்ளதால், அதற்குப் பதிலாக சேலம் மாவட்டத்தில் மாற்று இடத்தை வனத் துறைக்கு வழங்கத் தீா்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்தும் இறுதி முடிவு எடுக்கப்படாததால் நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைவதற்கான இடத்தைத் தோ்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது என்றாா்.

இந்நிலையில், நீலகிரியைத் தவிா்த்து தமிழகத்தில் ஏனைய 8 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைவதற்கான அடிக்கல் நாட்டு விழா மாா்ச் மாதத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூா்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் மட்டும் விடுபட்டுள்ளதால் மாவட்ட மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனா். எனவே, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான மாற்று இடத்தை உடனடியாக தோ்வு செய்து மருத்துவமனைக்கான பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்பதே மலை மாவட்ட மக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com