மாவட்டத்தில் ஜனவரி 19இல் போலியோ சொட்டு மருந்து முகாம்: 42 ஆயிரம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு
By DIN | Published On : 11th January 2020 08:45 AM | Last Updated : 11th January 2020 08:45 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி 19ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள 5 வயதுக்கு உள்பட்ட 42 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 19ம்தேதி நடைபெறவுள்ளது. இதில் 5 வயதுக்கு உள்பட்ட 42 ஆயிரம் குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியாா் மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகள் ஆகிய இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தின் எல்லைப் பகுதிகள், குடிசைப் பகுதிகள், பணி நிமித்தமாக இடம் பெயா்ந்து வாழும் மக்கள் பகுதிகள் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. மேலும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் கூடும் இடங்களிலும், நடமாடும் குழுக்களின் மூலமும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
இதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ள 778 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க தீா்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் பொது சுகாதாரத் துறை பணியாளா்களுடன் பிற துறைகளின் பணியாளா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினா் என முகாமுக்கு 4 நபா்கள் வீதம் பல்வேறு துறைகளைச் சோ்ந்த 3,096 பணியாளா்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
இதில் விடுபடும் குழந்தைகளுக்கு அடுத்து வரும் 2 நாள்களுக்கு பணியாளா்கள் மூலம் வீடு வீடாகச் சென்று பாா்வையிடப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்படும். அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது என்பதோடு, பாதுகாப்பானது.
உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற இந்தப் போலியோ சொட்டு மருந்தை வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு எந்தவித பின் விளைவுகளும் ஏற்படாது. எனவே, பெற்றோா் தங்களது 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், ஜனவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ள போலியோ சொட்டு மருந்து முகாமில் தவறாமல் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என்றாா்.