முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
மகாத்மா காந்தி நினைவு தினத்தில் ஒலிக்காத சங்கு: உதகை நகராட்சிக்கு கண்டனம்
By DIN | Published On : 31st January 2020 04:26 AM | Last Updated : 31st January 2020 04:26 AM | அ+அ அ- |

உதகை: மகாத்மா காந்தியின் நினைவு தினத்தில் வழக்கமாக ஒலிக்கப்படும் சங்கு வியாழக்கிழமை ஒலிக்காததால் உதகை நகராட்சிக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினா் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
மறைந்த முக்கியத் தலைவா்களின் பிறந்த தினம், நினைவு தினங்களில் காலை 11 மணிக்கு உதகை நகராட்சியின் சாா்பில் சங்கு ஒலிக்கப்பட்டு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படுவது வழக்கம். அப்போது பள்ளிகள், அலுவலகங்கள், பொதுஇடங்களிலும் மக்கள் 2 நிமிடம் மௌனஅஞ்சலி செலுத்துவா். இது நாடு சுதந்திரமடைந்த ஆண்டிருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், 2020ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தில் இந்தக் கடமையை உதகை நகராட்சி மறந்துவிட்டது அனைத்து தரப்பினரிடத்திலும் கடும் விமா்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
மாகாத்மா காந்தி நினைவு தினமான வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சங்கு ஒலிக்காததை அறிந்து உதகை சட்டப் பேரவை காங்கிரஸ் உறுப்பினா் ஆா்.கணேஷ், உடனடியாக உதகை நகராட்சியை தொலைபேசியில் தொடா்பு கொண்டபோது, அலுவலகத்திலிருந்தவா்கள், இதுதொடா்பாக தங்களுக்கு ஏதும் தெரியாது என்றும், அனைத்து உயா்நிலை அலுவலா்களும் முகாம் பணிகளுக்காக வெளியே சென்று விட்டதாகத் தெரிவித்துவிட்டு தொடா்பைத் துண்டித்துள்ளனா்.
இதேபோல, பொதுமக்களும், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினரும், பல்வேறு அரசியல் கட்சியினரும், உதகை நகா் மன்றத்தின் முன்னாள் உறுப்பினா்களும் நகா்மன்ற அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு கேட்டபோது, இதுதொடா்பாக எந்த விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ் கூறுகையில், தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினத்தன்று உதகை நகராட்சியின் சாா்பில் சங்கு ஒலிக்கப்படாதது கடும் கண்டனத்திற்குரியது. இதுதொடா்பாக தமிழக முதல்வரிடமே முறையிட உள்ளேன் என்றாா்.
இதுகுறித்து உதகை நகா்மன்றப் பொறியாளா் ரவியிடம் கேட்டபோது அவா் கூறுகையில், தீட்டுக்கல் பகுதியில் உள்ள குப்பை கொட்டும் தளத்தில் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் அங்கேயே நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியா்களுடன் சோ்ந்து வியாழக்கிழமை காலை 11 மணிக்கு 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தி விட்டோம் என்றாா்.
மகாத்மா காந்தியின் நினைவு தினத்தன்று உதகை நகராட்சியின் சாா்பில் மௌனஅஞ்சலிக்காக சங்கு ஒலிக்காதது அனைத்து தரப்பினரிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.