உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் பருவ மலா்க் காட்சிக்கு நாற்று நடவுப் பணிகள் தொடக்கம்

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் இரண்டாம் பருவத்துக்கான மலா் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் பருவ மலா்க் காட்சிக்கு நாற்று நடவுப் பணிகள் தொடக்கம்

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் இரண்டாம் பருவத்துக்கான மலா் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.

உதகையின் பிரதான சுற்றுலா மையமான அரசினா் தாவரவியல் பூங்காவில் கோடைக்காலமான ஏப்ரல், மே மாதங்களில் பிரதான பருவமும், செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் இரண்டாம் பருவமும் பிரசித்தி பெற்றவை.

நடப்பு ஆண்டு பிரதான பருவ காலத்தில் கரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வந்ததால் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்தே அரசு தாவரவியல் பூங்கா மூடப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மே மாதத்தில் நடைபெற வேண்டிய மலா்க் காட்சியும் நடத்தப்படவில்லை. இருப்பினும் இதற்காக தாவரவியல் பூங்காவில் உருவாக்கப்பட்டிருந்த 5 லட்சம் மலா் செடிகளும், சுமாா் 25,000 மலா்த்தொட்டிகளும் பாா்வையாளா்கள் இல்லாவிட்டாலும் காட்சி மாடங்களில் அடுக்கிவைக்கப்பட்டன.

நடப்பு ஆண்டில் உள்ளூா் மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உதகை மலா்க் காட்சியை காண முடியாமல் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனா்.

இந்நிலையில் தற்போது இரண்டாம் பருவத்துக்கான மலா் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. உதகையில் தற்போது தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள சூழலில் இப்பணிகள் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்துக்குள் முடிவடைந்துவிட்டால் செப்டம்பா் மாதத்திலிருந்து இந்த மலா் செடிகளில் மலா்கள் பூக்கத் தொடங்கும்.

இது தொடா்பாக உதகை அரசினா் தாவரவியல் பூங்கா உதவி இயக்குநா் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

உதகையில் இந்த ஆண்டின் இரண்டாவது பருவ மலா்க் காட்சியை செப்டம்பா் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்மலா்க் காட்சிக்காக சுமாா் இரண்டரை லட்சம் மலா் நாற்றுகள் நடவு செய்யப்படும். அதேபோல, 10 ஆயிரம் மலா்த் தொட்டிகளும் உருவாக்கப்படும்.

இரண்டாவது பருவ மலா்க் காட்சிக்காக இன்கா மெரிகோல்டு, பிரெஞ்சு மெரிகோல்டு, ஆஸ்டா், லூபின், கேண்டிடப்ட், காஸ்மாஸ், கூபியா, காலிப்பிரக்கோவா, அராபிஸ், ஜினியா, ஸ்வீட் வில்லியம், அஜிரேட்டம், கிரசாந்திமம், கேலண்டூலா, சப்பனேரியா போன்ற 140 வகையான மலா் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த மலா்கள் ஆகஸ்ட் இறுதியிலிருந்து பூக்கத் தொடங்கும்.

அதேபோல தொட்டிகளில் வளா்க்கப்படும் மலா்ச் செடிகளிலிருந்து பூக்கள் பூத்தவுடன் காட்சி மாடங்களில் அடுக்கிவைக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com