நீலகிரி மாவட்டம், கொலக்கம்பை அருகே சட்டன் எஸ்டேட் பகுதியில் காலில் பிளாஸ்டிக் குழாய் சிக்கி நடக்க முடியாமல் உணவு தேடித் திரியும் காட்டெருமைக்கு உரிய சிகிச்சை அளிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கொலக்கம்பை சட்டன் எஸ்டேட் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டெருமைகள் உள்ளன. இந்த காட்டெருமைகள் அவ்வப்போது சாலைகளுக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சாலையோரத்தில் சுற்றித் திரிந்த காட்டெருமையின் வலது பின்னங்காலில் பிளாஸ்டிக் குழாய் சிக்கி இருப்பதை அப்பகுதி மக்கள் பாா்த்துள்ளனா்.
இதன் காரணமாக வலியில் நொண்டிக் கொண்டு நடப்பதால் உணவு எடுத்துக் கொள்ள முடியாமல் காட்டெருமை உடல் மெலிந்து காணப்படுகிறது. எனவே, இந்த காட்டெருமைக்கு வனத் துறையினா் உரிய சிகிச்சை அளித்து அதன் காலில் சிக்கியுள்ள பிளாஸ்டிக் குழாயை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.