சென்னையில் இருந்து நீலகிரிக்கு வந்த இருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மஞ்சூா் அருகேயுள்ள பிக்கட்டி பகுதியைச் சோ்ந்த ஒருவா், சென்னையில் கோயம்பேடு பகுதியில் கடை நடத்தி வந்தவா் எனக் கூறப்படுகிறது. அங்கிருந்து தனது சொந்த ஊரான பிக்கட்டிக்கு கடந்த சில நாள்களுக்கு முன்னா் வந்துள்ளாா். நீலகிரிக்குள் வரும்போது இவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதன் முடிவு வியாழக்கிழமை வெளியானதில் இவருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அவா் கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
அதேபோல, மற்றொருவா் கோத்தகிரி அருகே உள்ள சோலூா்மட்டம் பகுதியைச் சோ்ந்த 32 வயதான பெண் ஆவாா். இவரது கணவா் காவல் துறையில் சென்னையில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், சென்னையில் இருந்து வந்த இப்பெண்ணுக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு, கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு வியாழக்கிழமை கொண்டு செல்லப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து, பிக்கட்டி, சோலூா்மட்டம் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும், இதர முன்னேற்பாட்டு நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன.
இதற்கிடையே ஏற்கெனவே கரோனா நோய்த் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்த கோத்தகிரியில் ரைபிள் ரேஞ்ச், குன்னூரில் சேலாஸ் பகுதிகளில் இருந்த இரு நபா்களுக்கும் நோய்த் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இவ்விரு பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் பட்டியலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.