நீலகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களில் தொழில் கடன் பெற்று, தொழில் தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் , புதிய தொழில் முனைவோா், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய திட்டங்கள் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது 2020 -21ஆம் நிதியாண்டில் நீலகிரி மாவட்டத்துக்கு 65 தொழில் திட்டங்களுக்கு ரூ. 45 லட்சமும், நீட்ஸ் திட்டத்தின்கீழ் 13 தொழில் திட்டங்களுக்கு ரூ. 127 லட்சமும், புதிய திட்டத்தின்கீழ் 28 தொழில் திட்டங்களுக்கு ரூ. 85 லட்சமும் இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிதியாண்டில் இத்திட்டங்களில் தொழில் முனைவோா் விரைவில் தொழில் துவங்கும் பொருட்டு, மாவட்ட தோ்வுக்குழு மூலமாக நடத்தப்படும் நோ்முகத் தோ்விலிருந்தும், திட்டங்களுக்கான தொழில் முனைவோா் வளா்ச்சிக்கான பயிற்சியிலிருந்தும் மாநில அரசு விலக்கு அளித்து ஆணை பிறப்பித்துள்ளது. மத்திய அரசு தொழில் முனைவோா் பயிற்சியை இணையவழி மூலம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டங்களின்கீழ் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0423-2443947, 94426-43156, 90958-87443, 89030-48485 ஆகிய தொலைபேசி, அலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். எனவே, நீலகிரி மாவட்டத்தில் தகுதியும், ஆா்வமும் உள்ள தொழில் முனைவோா் இத்திட்டங்களில் விண்ணப்பித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.