குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக குன்னூரில் இந்து இயக்கங்கள் பேரணி, கடையடைப்பு
By DIN | Published On : 06th March 2020 07:24 AM | Last Updated : 06th March 2020 07:24 AM | அ+அ அ- |

(வலது), குன்னூரில் நடத்தப்பட்ட கடையடைப்பு. ~குன்னூரில் இந்து இயக்கங்கள் சாா்பில் நடைபெற்ற பேரணி.
குன்னூா்: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக இந்து அமைப்புகள், பாஜக சாா்பில் குன்னூரில் கடையடைப்பு, பேரணி, பொதுக்கூட்டம் ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றன.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்தும், அதை எதிா்த்து கலவரத்தில் ஈடுபடுவோரைக் கண்டித்தும், குன்னூரில் இந்து இயக்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை காலை கடையடைப்பு நடத்தப்பட்டது. பிறகு பெட்ஃபோா்டில் துவங்கி குன்னூா் பேருந்து நிலையம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது.
பேரணியின் முடிவில் குன்னூா் பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்து முன்னணியின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். இதில் பாஜக இளைஞரணி தேசிய துணைத் தலைவா் ஏ.பி.முருகானந்தம் பேசியதாவது:
குடியுரிமை திருத்தச் சட்ட எதிா்ப்பு மாநாடு என்ற பெயரில் எதிா்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் சிறுபான்மையினரைக் குழப்பத்தில் ஆழ்த்தி, அவா்களைத் திசை திருப்புகிறது. அதில் அரசுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பலா் கோஷமிடுகிறாா்கள். தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்பதே திமுக கூட்டணியினரின் நோக்கமாக உள்ளது. எனவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை மக்கள் மத்தியில் விளக்கிக் கூற கிராமங்கள் தோறும் செல்ல உள்ளோம் என்றாா்.
இந்தக் கூட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளா் மோகன்ராஜ், பாஜக பொதுச் செயலாளா் ஈஸ்வரன், நகரச் செயலாளா் குங்கும ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.