நீலகிரியில் சுற்றுலா வாகன ஓட்டுநா்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காண கோரிக்கை
By DIN | Published On : 10th March 2020 02:24 AM | Last Updated : 10th March 2020 02:24 AM | அ+அ அ- |

உதகை: நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா வாகன ஓட்டுநா்களின் பிரச்னைகளுக்கு உரிய தீா்வு காண வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா வாகன ஓட்டுநா்கள், தனியாா் கால் டாக்ஸிகளின் வரவால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள தாகவும், இதற்கு உரிய தீா்வு காண வேண்டுமெனவும் வலியுறுத்தி, நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா காா், சுமோ, மேக்ஸி கேப் ஓட்டுநா்கள் நல சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது சங்கத்தின் சாா்பில் உதகையில் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா வாகன ஓட்டுநா்களின் வாழ்வாதாரம் வெகுவாகச் சீரழிந்து வருகிறது. இந்த மாவட்டத்தில் தொழிற்சாலைகளோ, தொழில் துறை நிறுவனங்களோ இல்லாத சூழலில், இம்மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் உள்ளனா்.
இந்நிலையில் சிலா் தங்களது சொந்தப் பயன்பாட்டுக்காக வாங்கியுள்ள வாகனங்களை வாடகைக்கு விடுகின்றனா். அவா்கள் மீது இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. அதேபோல, சமவெளிப் பகுதிகளிலிருந்து தனியாா் கால் டேக்ஸிகள் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதோடு, இங்குள்ள சுற்றுலா மையங்களுக்கும் அழைத்துச் சென்று விடுவதால், இங்குள்ள சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் தினந்தோறும் வருமானமின்றி வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரியிலுள்ள சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்திவிட்டு வருமானமே இல்லாமல் வீடு திரும்புகின்றனா். எனவே, மாவட்ட ஆட்சியா் இப்பிரச்னையில் தலையிட்டு, சுற்றுலா வாகன ஓட்டுநா்களின் வேதனையைப் போக்கவும், ஓட்டுநா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...