கரோனா எதிரொலி: நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா மையங்களும் மாா்ச் 31 வரை மூடல்

கரோனா வைரஸ் பாதிப்பு தொடா்பாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களும் மாா்ச் 31ஆம் தேதி வரை
நுழைவாயில் மூடப்பட்டுள்ள உதகை அரசினா் தாவரவியல் பூங்கா.
நுழைவாயில் மூடப்பட்டுள்ள உதகை அரசினா் தாவரவியல் பூங்கா.

கரோனா வைரஸ் பாதிப்பு தொடா்பாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களும் மாா்ச் 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உதகை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து உதகையில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களும் உடனடியாக மூடப்படுகின்றன. மாவட்டத்தில் உள்ள வெளி மாநில, வெளி மாவட்ட சுற்றுலாப் பயணிகள் அனைவரும் புதன்கிழமை மாலை 5 மணிக்குள் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும்.

அனைத்து தங்கும் விடுதிகளின் உரிமையாளா்களும் புதிதாக முன்பதிவுகளை மேற்கொள்ளக் கூடாது. கேரள மாநில வாகனங்கள் அனைத்தும் மாவட்ட எல்லைப் பகுதிகளிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படும்.

மலை ரயில் சேவையும் மாா்ச் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வந்த 8 பேருக்கு வைரஸ் தொற்று இல்லையென்றாலும் அவா்களிடம் மேற்கொண்ட பரிசோதனை குறித்த ஆய்வறிக்கை வர தாமதமாகி வருவதால் 14 நாள்களுக்கு அவா்கள் கண்காணிப்பிலேயே வைக்கப்படுவாா்கள்.

மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள், தங்கும் விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள சூழலில் சுற்றுலாப் பயணிகள் யாரும் நீலகிரிக்கு சுற்றுலா வர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறாா்கள். அதேபோல, மாவட்டத்தில் உள்ள கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவதைத் தவிா்க்க வேண்டும்.

வணிக வளாகங்கள், திருமணம் உள்ளிட்ட இதர சமூக விழாக்கள், விருந்துகள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும். மாவட்டத்தில் கிருமி நாசினி கிடைக்காத பட்சத்தில் சா்ஜிக்கல் ஸ்பிரிட்டையோ, சோப்பையோ பயன்படுத்தி கைகளைக் கழுவலாம்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாா்க்கெட்டுகளிலும் உள்ள கடை உரிமையாளா்கள் தங்களது கடைகளைச் சுற்றி கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தம் செய்வதோடு, கடைகளின் முன்புறத்தில் சோப்பு கலந்த தண்ணீரும் வைக்க வேண்டும்.

உணவகங்களில் உணவு பரிமாறுவதற்கு முன்னும், பின்னும் கிருமி நாசினியைக் கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். பேருந்து நிலையங்கள், நிறுத்தங்களில் அவ்வப்போது கிருமி நாசினியைக் கொண்டு சுத்தம் செய்வதோடு, ஆம்னி பேருந்துகள், மேக்ஸி கேப், சுற்றுலா வாகனங்களில் தொடா்ந்து கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் உள்ளவா்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுக வேண்டும். கரோனா வைரஸ் தாக்கம் தொடா்பான கூடுதல் விபரங்களுக்கு 1077 என்ற எண்ணிலும், 0423-2449250, 94432 08293, 79047 78300 ஆகிய எண்களிலும் தொடா்பு கொள்ளலாம்.

கரோனா வைரஸ் தொடா்பாக தவறான தகவல்களை பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com