கரோனா எதிரொலி: தேயிலைத் தேக்கத்தால் விவசாயிகள் பாதிப்பு

கரோனா வைரஸ் தாக்கத்தால் நீலகிரி மாவட்டத்தின் முதுகெலும்பாகத் திகழும் தேயிலை விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

கரோனா வைரஸ் தாக்கத்தால் நீலகிரி மாவட்டத்தின் முதுகெலும்பாகத் திகழும் தேயிலை விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் உற்பத்தியாகும் தேயிலை  ஈரான், இராக், மலேசியா, ஜப்பான், அரபு நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கரோனா வைரஸ் தாக்கத்தால் மேற்கண்ட நாடுகளுக்கு தேயிலைத் தூள் ஏற்றுமதி செய்யப்படவில்லை. இதேபோல பல நாடுகளும் தேயிலைத் தூளை வாங்க முன்வரவில்லை. இதனால் தென் இந்தியாவில்  நீலகிரி, கோவை, கொச்சி ஆகிய பகுதிகளில் உள்ள ஏல மையங்களிலும்,  கொல்கத்தா, சிலிகுரி, குவாஹாட்டி  உள்ளிட்ட தேயிலை ஏல  மையங்களிலும் இருந்து தேயிலைத் தூள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கி உள்ளது.

நீலகிரி தேயிலை ஏல  மையத்தில்  மாதத்துக்கு சராசரியாக 60 லட்சம் கிலோ  வரை விற்பனைக்கு வரும் நிலையில் 40 சதவீதம் வரை விற்பனை ஆகாமல் கிடங்குகளில் தேங்கிக் கிடக்கிறது. இதனால் தேயிலை விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தொழிலை  நம்பி 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  விவசாயக் குடும்பங்கள் உள்ளன. தேயிலைத் தூள் ஏற்றுமதி இல்லாத நிலை, விற்பனையில் மந்தம் உள்ளிட்ட காரணங்களால் விளையும் பச்சைத் தேயிலைகள் வீணாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இதேபோல தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழகத்திலும் போதிய வருவாய் இல்லாததால் டேன்டீ தொழிலாளா்களுக்கு சம்பளம் வழங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கிலோ 110 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை  விற்கப்பட்ட ஒரு கிலோ தேயிலைத் தூள்  தற்போது கிலோ 55 ரூபாய் முதல் 65 ரூபாய் வரை மட்டுமே விற்கப்படுகிறது,    

இதனால் தனியாா், டேன்டீ, கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலை பணியாளா்கள், ஊழியா்கள், விவசாயிகள், தோட்டத் தொழிலாளா்கள் என தேயிலைத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் பொருளாதார ரீதியாக வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா்.  

இந்த நிலை தொடரும்பட்சத்தில் ஒட்டுமொத்த நீலகிரியின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டத் தேயிலைத் தொழிற்சாலைகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேயிலை கூட்டமைப்பினா் தெரிவித்துள்ளனா்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com