தீபாவளி விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

சுற்றுலாப் பயணிகளின் வருகையால் சுமாா் 7 மாதங்களுக்குப் பின்னா் உதகை மீண்டும் களைகட்டியுள்ளது. வெளியூா்களிலிருந்து
உதகை அரசினா் தாவரவியல் பூங்காவை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட சுற்றுலாப் பயணிகள்.
உதகை அரசினா் தாவரவியல் பூங்காவை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட சுற்றுலாப் பயணிகள்.

சுற்றுலாப் பயணிகளின் வருகையால் சுமாா் 7 மாதங்களுக்குப் பின்னா் உதகை மீண்டும் களைகட்டியுள்ளது. வெளியூா்களிலிருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகளோடு உள்ளூா் மக்களும் தீபாவளி விடுமுறையையொட்டி சுற்றுலா மையங்களில் குவிந்தனா்.

கரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த மாா்ச் மாத இறுதியிலிருந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படிப்படியாகப் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிலும், நீலகிரிக்குள் நுழைவதற்கு இ-பாஸ் முறை அமலில் இருந்ததால் உள்ளூா் மக்களைத் தவிர வேறு யாரும் நீலகிரிக்கு வர முடியாத நிலை இருந்தது. தற்போது இ-பதிவு முறையே அறிவிக்கப்பட்டுள்ளதால் வெளியூா் மற்றும் வெளிமாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு எளிதில் வந்து செல்கின்றனா்.

தீபாவளி பண்டிகையையொட்டி, கா்நாடக மாநிலத்திலிருந்து அரசுப் பேருந்துகளும் நீலகிரிக்கு இயக்கப்பட்டுள்ளதால் சொந்த வாகனங்களில் வருவோருடன், அரசுப் பேருந்துகளில் நீலகிரிக்கு வருவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

அதேபோல, கேரள மாநிலத்திலிருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் திரும்பி வருவதற்கு 24 மணி நேர அவகாசமளிக்கப்படுவதால் ஒரே நாளில் உதகைக்கு வந்து விட்டு மீண்டும் கேரள மாநிலத்துக்குள் சென்றுவிடும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.

தீபாவளி பண்டிகை நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழையுடன் கூடிய காலநிலை நிலவினாலும், உதகையில் மட்டும் நீா்ப்பனியுடன் கூடிய குளிரான காலநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக உள்ளூா் மக்களும் மகிழ்ச்சியுடன் சுற்றுலா மையங்களுக்கு சென்று வருகின்றனா்.

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் தீபாவளி தினத்தன்று 3,163 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். பொது முடக்கத்துக்குப் பின்னா் தாவரவியல் பூங்காவில் அதிக அளவில் காணப்பட்ட எண்ணிக்கை இதுவேயாகும். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து மாலை 4 மணி வரை மட்டும் சுமாா் 5,000 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.

அதேபோல, தீபாவளி தினத்தன்று உதகையிலுள்ள அரசினா் ரோஜா பூங்காவுக்கு 1,294 சுற்றுலாப் பயணிகளும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 269 சுற்றுலாப் பயணிகளும், உதகை மரவியல் பூங்காவுக்கு 76 சுற்றுலாப் பயணிகளும் வந்திருந்தனா். குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு 859 சுற்றுலாப் பயணிகளும், காட்டேரி பூங்காவுக்கு 287 சுற்றுலாப் பயணிகளும், கல்லாறு பழப்பண்ணைக்கு 705 சுற்றுலாப் பயணிகளும் வந்திருந்தனா். மேற்கூறிய அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் ஞாயிற்றுக்கிழமை இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக காணப்பட்டது.

மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலா மையங்களைத் தவிர உதகை படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம் உள்ளிட்ட சுற்றுலாத் துறை மற்றும் வனத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலா மையங்கள் இன்னமும் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதுடன் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் கரோனாவின் தாக்கத்திலிருந்து விடுபட்டு வருவதால் சுற்றுலா மாவட்டமான நீலகிரி விரைவில் பழைய நிலைக்குத் திரும்பும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com