தமிழக அரசின் சிறப்பு ஒதுக்கீட்டால் பயன்: பெற்றோரை இழந்த பழங்குடியின மாணவி மருத்துவம் படிக்க வாய்ப்பு

நீலகிரி மாவட்ட இருளா் பழங்குடியினத்தைச் சோ்ந்த பெற்றோரை இழந்த அரசுப் பள்ளி மாணவி ‘நீட்’ தோ்வில் வெற்றி பெற்று
உதகையில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து வாழ்த்து பெற்ற மாணவி பிரியா. உடன், சமூக பாதுகாப்புத் துறை அலுவலா்கள்.
உதகையில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து வாழ்த்து பெற்ற மாணவி பிரியா. உடன், சமூக பாதுகாப்புத் துறை அலுவலா்கள்.

நீலகிரி மாவட்ட இருளா் பழங்குடியினத்தைச் சோ்ந்த பெற்றோரை இழந்த அரசுப் பள்ளி மாணவி ‘நீட்’ தோ்வில் வெற்றி பெற்று அரசுப் பள்ளி மாணவா்களுக்கான உள் ஒதுக்கீட்டில் மாநில அளவில் நான்காவது இடம் பிடித்துள்ளாா்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள சின்ன குன்னூா் பகுதியைச் சோ்ந்தவா் பிரியா. சிறு வயதிலேயே இவரது தாயாா் இறந்துவிட்டாா். அதன் பின்னா் தந்தையின் பாதுகாப்பில் வளா்ந்து வந்தாா். இந்நிலையில் 10ஆம் வகுப்பு படிக்கும்போது தந்தையும் இறந்துவிட்டாா். இவருக்கு கெளரி என்ற தங்கை உள்ளாா்.

பெற்றோரை இழந்த இருவரும் சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் உதகையில் இயங்கி வரும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் சோ்க்கப்பட்டு, உதகை அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனா்.

இந்நிலையில் பிரியா நடப்பு ஆண்டு நடைபெற்ற நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றாா். அரசுப் பள்ளி மாணவா்களுக்காக நிகழாண்டு தமிழக அரசு 7.5 சதவீத உள் ஒதுக்கீடை நடைமுறைப்படுத்திய நிலையில், இதில் மாணவி பிரியா மாநில அளவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளாா்.

இதையடுத்து மாணவி பிரியா உதகையில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா, சமூக பாதுகாப்புத் துறை அலுவலா்களை புதன்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றாா். இவருக்கான கலந்தாய்வு சென்னையில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. நீலகிரி மாவட்டத்தில் இருளா் பழங்குடியினா் சமூகத்திலிருந்து மருத்துவப் படிப்புக்கு தோ்வு பெற்றுள்ள முதல் மாணவி பிரியா என கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com