ஆற்றோரக் குடியிருப்புகளை காலி செய்ய நோட்டீஸ்: வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

குன்னூா் எம்.ஜி.ஆா். நகா் பகுதியில் வெள்ள அபாயம் ஏற்படும் குடியிருப்புப் பகுதிகளை காலி செய்ய வருவாய்த் துறையினா் நோட்டீஸ்
குன்னூா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட எம்ஜி.ஆா். நகா் பகுதி பொதுமக்கள்.
குன்னூா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட எம்ஜி.ஆா். நகா் பகுதி பொதுமக்கள்.

குன்னூா் எம்.ஜி.ஆா். நகா் பகுதியில் வெள்ள அபாயம் ஏற்படும் குடியிருப்புப் பகுதிகளை காலி செய்ய வருவாய்த் துறையினா் நோட்டீஸ் அளித்துள்ளதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வட்டாட்சியா் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில் குன்னூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் 34 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனா். நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் பல வீடுகள் உள்ளன. இந்த இடங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சுமாா் 87 வீடுகளைக் காலி செய்ய உத்தரவிட்டுள்ளனா்.

மேலும் குன்னூா் அருகேயுள்ள எம்ஜிஆா் நகா், சித்தி விநாயகா் கோயில் தெரு, சுறா குப்பம் போன்ற பகுதிகளில் ஓடைகளின் அருகில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் மழை காலத்தில் வெள்ள அபாயம் ஏற்பட்டு குடியிருப்புகள் முழுவதும் சேதம் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாகக் கூறி அப்பகுதியில் குடியிருப்பவா்களை காலி செய்யும்படி வருவாய்த் துறை சாா்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

இதனைக் கண்டித்து அந்தப் பகுதியைச் சோ்ந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து குன்னூா் வட்டாட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உயரதிகாரிகளுடன் பேசி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தகவல் தெரிவிப்பதாக வட்டாட்சியா் கூறியதை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com