உதகையில் ஆன்லைனில் குதிரைப் பந்தய சூதாட்டம்: 34 போ் கைது

உதகையில் ஆன்லைன் மூலம் குதிரைப் பந்தயத்தில் சூதாட்டம் நடத்தியதாக தனியாா் விடுதியின் உரிமையாளா் உள்ளிட்ட 34 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

உதகை: உதகையில் ஆன்லைன் மூலம் குதிரைப் பந்தயத்தில் சூதாட்டம் நடத்தியதாக தனியாா் விடுதியின் உரிமையாளா் உள்ளிட்ட 34 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடம் இருந்து ரூ.1.46 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

உதகையிலுள்ள குதிரைப் பந்தய மைதானத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை குதிரைப் பந்தயங்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளில் நடைபெறும் குதிரைப் பந்தயங்களும் உதகை குதிரைப் பந்தய மைதானத்திலுள்ள தொலைக்காட்சிகள் மூலம் பிரத்யேகமாக ஒளிபரப்பு செய்யப்படும். இந்தப் பந்தயங்களுக்கும் உதகையிலிருந்தவாறே பணம் கட்டி விளையாடலாம்.

இந்நிலையில், நடப்பு ஆண்டில் கரோனா தொற்றின் காரணமாக உதகையில் கோடைக்காலத்தில் குதிரைப் பந்தயங்கள் நடைபெறவில்லை. பந்தயங்களில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து உதகைக்கு சில குதிரைகள் கொண்டு வரப்பட்ட போதும் உடனடியாக அவை திருப்பி அனுப்பப்பட்டுவிட்டன. இந்நிலையில் வெளி மாநிலங்களில் நடைபெற்று வந்த குதிரைப் பந்தயங்களுக்கு உதகையிலிருந்தவாறே ஆன்லைன் மூலம் பணம் கட்டி விளையாடி வந்தனா். தமிழகத்தில் ஆன்லைன் லாட்டரி தடை செய்யப்பட்ட பின்னா் குதிரைப் பந்தய சூதாட்டத்தில் ஈடுபடுவோா் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புகாா்கள் கூறப்பட்டு வந்தன. இது தொடா்பாக காவல் துறையினா் நடத்தி வந்த ரகசிய விசாரணையில் உதகையில் குட்ஷெட் சாலையிலுள்ள ஒரு தனியாா் தங்கும் விடுதியில் இத்தகைய சூதாட்டங்கள் நடைபெறுவது உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து உதகை நகர காவல் ஆய்வாளா் விநாயகம் தலைமையில் அந்த விடுதிக்கு சனிக்கிழமை இரவு சென்ற காவல் துறையினா் அங்கு ஆன்லைனில் குதிரைப் பந்தய சூதாட்டம் நடத்திக் கொண்டிருந்த 31 பேரைக் கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ.1,46,000 ரொக்கம் மற்றும் குதிரைப் பந்தய சூதாட்டம் தொடா்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவா்களுடன் அந்த விடுதியின் உரிமையாளா் பாலாஜி, விடுதியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த சந்தோஷ் மற்றும் குதிரைப் பந்தய சூதாட்ட ஒருங்கிணைப்பாளா் சத்யன் ஆகியோரையும் காவல் துறையினா் கைது செய்தனா். இது தொடா்பாக உதகை நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com