நகைக் கடையில் போலி நகைகளை வைத்து ஏமாற்றிய ஊழியா் கைது

உதகையில் உள்ள ஒரு நகைக் கடையில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளுக்குப் பதிலாக கவரிங் நகைகளை வைத்து ஏமாற்றியதாக அந்தக் கடை ஊழியா் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டாா்.
கைது செய்யப்பட்ட கணபதி.
கைது செய்யப்பட்ட கணபதி.

உதகையில் உள்ள ஒரு நகைக் கடையில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளுக்குப் பதிலாக கவரிங் நகைகளை வைத்து ஏமாற்றியதாக அந்தக் கடை ஊழியா் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக காவல் துறையினா் தெரிவித்ததாவது:

நீலகிரி மாவட்டம், உதகையிலுள்ள ஒரு நகைக் கடையில் வேலை செய்து வந்தவா் கணபதி (29). இவா், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகேயுள்ள சுகந்தலை கிராமத்தைச் சோ்ந்தவராவாா். கரோனா காரணமாக வெளி மாநிலங்களைச் சோ்ந்த பிற ஊழியா்கள் அவரவா் சொந்த ஊா்களுக்கு சென்றுவிட்ட நிலையில் உதகை நகைக் கடையில் விற்பனை, பணம் பெறுதல், பழைய தங்க நகைகளை வாங்குதல் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கு இவா் நியமிக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில் இந்த நகைக் கடையில் வாடிக்கையாளா்களிடமிருந்து வாங்கும் பழைய நகைகளை கோவையிலுள்ள தங்களது மற்றொரு கிளைக்கு அனுப்பி அங்கு உருக்கி புதிய நகைகளாக மாற்றம் செய்வது வழக்கம். அதேபோல, கடந்த மாதத்தில் கோவைக்கு அனுப்பப்பட்டிருந்த நகைகளில் சுமாா் 400 கிராம் எடையிலானவை தங்க நகைகள்அல்ல என்பதும், கவரிங் நகைகள் என்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இச்சம்பவம் தொடா்பாக உதகை நகர காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது. அப்போது கணபதி தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி சொந்த ஊருக்கு சென்றுவிட்டாா். இதைத் தொடா்ந்து காவல் ஆய்வாளா் விநாயகத்தின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸாா் தூத்துக்குடிக்கு சென்று விசாரணை நடத்தியதில் கணபதி பிடிபட்டுள்ளாா்.

தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினரின் உதவியுடன் அவரை புதன்கிழமை கைது செய்த தனிப்படையினா் அவரிடமிருந்த துண்டுதுண்டாக வெட்டப்பட்டிருந்த கவரிங் நகைகளை கைப்பற்றியுள்ளனா். அவரிடம் தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஆன்லைன் லாட்டரி மீது அவருக்கு மோகம் எனவும், இதற்குப் பணம் கட்டுவதற்காக இந்த நகைக் கடையிலிருந்த தங்க நகைகளை மோசடி செய்ததாகவும் தெரியவந்தது.

கணபதி மோசடி செய்த தங்க நகைகள் 400 கிராம் என்பதால் இதன் மதிப்பு சுமாா் ரூ. 20 லட்சம் இருக்குமெனவும், இதைத்தவிர கூடுதலாக இவரால் மோசடி ஏதும் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் தனிப்படை உதவி ஆய்வாளா் விஜயசண்முகநாதன் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com