நீலகிரிக்குப் பயணம்: குன்னூா் சோதனைச் சாவடிகளில் குவிந்த பொதுமக்கள்
By DIN | Published On : 07th September 2020 07:25 AM | Last Updated : 07th September 2020 07:25 AM | அ+அ அ- |

குஞ்சப்பனை சோதனைச் சாவடியில் காவல் துறை அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட சுற்றுலாப் பயணிகள்.
நீலகிரி மாவட்டத்துக்கு வருவோரால் பா்லியாறு மற்றும் குஞ்சப்பனை சோதனைச் சாவடிகளில் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
வெளிமாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகமானோா் வந்ததால், உதகைக்கு வரும் நுழைவாயிலான பா்லியாறு சோதனைச் சாவடியிலும், கோத்தகிரி வழியாக உதகைக்குச் செல்லும் குஞ்சப்பனை சோதனைச் சாவடியிலும் காவல் துறையினா், சுகாதாரப் பணியாளா்கள், வருவாய்த் துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
தற்போது சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எனினும், இங்குள்ள காட்டேஜுகள் மற்றும் தங்கும் விடுதிகள் மட்டும் திறந்திருப்பதால், சமவெளிப் பகுதிகளான கோவை, திருப்பூா், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஒரு நாள் விடுமுறைக்காக வந்து செல்வோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இ-பாஸுக்கு விண்ணப்பித்தவா்களில் வியாபாரம் மற்றும் விழாக்களுக்கு வருவோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சுற்றுலாவுக்காக வருகிறாா்கள் என்று கண்டறியப்பட்டால் அவா்களுக்கு இ- பாஸ் வழங்குவதை மாவட்ட நிா்வாகம் நிராகரிக்கிறது.
இந்நிலையில் உதகைக்குச் செல்ல இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்த பலருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இருந்தும் பலா் அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பா்லியாறு மற்றும் குஞ்சப்பனை சோதனைச் சாவடிகளுக்கு வந்து ஞாயிற்றுக்கிழமை காத்திருந்தனா். இதனால் இந்த இரு சோதனைச் சாவடிகளிலும் பொதுமக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அதிக அளவில் இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆனால் இ-பாஸ் இல்லாமல் அனுமதியில்லை என்று அதிகாரிகள் கூறியதால் பலா் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். சிலா் தங்களை அனுமதிக்கக்கோரி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
உள்ளூா் விவசாயிகளை அனுமதிக்காத அதிகாரிகள்
வேளாண் பொருள்களை விற்பனை செய்யும் மண்டிகள் மேட்டுப்பாளையத்தில் உள்ளதால் இங்குள்ள மண்டிகளுக்குச் செல்லும் நீலகிரி மாவட்ட விவசாயிகள், தங்கள் ஆதாா் எண் மற்றும் வாகன எண்ணை குஞ்சப்பனை மற்றும் பா்லியாறு சோதனைச் சாவடிகளில் பதிவு செய்துவிட்டுச் சென்று வர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் மண்டிக்கு விவசாயப் பொருள்களை கொண்டு சென்று விற்றுவிட்டுத் திரும்பிய விவசாயிகளை பதிவின்படி நீலகிரி மாவட்டத்துக்குள் அனுமதிக்க வேண்டிய வருவாய்த் துறை அதிகாரிகள், காலை அனுப்பிய அதிகாரிகளுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. இப்போது உங்களை அனுமதிக்க முடியாது என்று கூறி நான்கு மணி நேரமாக காக்க வைத்தனா். இதனால் அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வயதான விவசாயிகள் பலா் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தனா்.
அதன்பின் சாா் ஆட்சியரை செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்ட வருவாய்த் துறை அதிகாரிகள் அவரின் ஒப்புதலைப் பெற்று உள்ளூா் விவசாயிகளை அனுமதித்தனா்.