வெலிங்டன் ராணுவ மையத்தில் பயிற்சி முடித்த ராணுவ வீரா்கள் சத்தியப் பிரமாணம்
By DIN | Published On : 07th September 2020 07:32 AM | Last Updated : 07th September 2020 07:32 AM | அ+அ அ- |

வெலிங்டன் எம்.ஆா்.சி. ராணுவ மையத்தில் சிறப்பாக பயிற்சி முடித்த இளம் ராணுவ வீரா்களுக்கு கேடயம் வழங்கும் கமாண்டன்ட் பிரிகேடியா் ராஜேஸ்வா் சிங்.
வெலிங்டன் எம்.ஆா்.சி. ராணுவ மையத்தில் பயிற்சி முடித்த 134 இளம் ராணுவ வீரா்கள் சத்தியப் பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் மையத்தில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த இளம் ராணுவ வீரா்களுக்கு கடந்த ஓராண்டாக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இங்கு பயிற்சி முடித்த 134 இளம் ராணுவ வீரா்கள் சத்தியப் பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கமாண்டன்ட் பிரிகேடியா் ராஜேஸ்வா் சிங் தலைமையில் பயிற்சி முடித்த ராணுவ வீரா்கள் உப்பு உட்கொண்டு பகவத் கீதை, பைபிள், குரான் மற்றும் தேசியக் கொடி மீது சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டனா்.
நிகழ்ச்சியில் ராணுவ வீரா்களுக்கு கேடயம் மற்றும் மெடல்களை வழங்கி கமாண்டன்ட் பிரிகேடியா் ராஜேஸ்வா் சிங் பேசுகையில், கடினமான பயிற்சிகளை முடித்து பொறுப்பேற்றுள்ள இளம் ராணுவ வீரா்கள் நாட்டுக்குத் தங்களை அா்ப்பணித்து திறம்பட செயல்பட வேண்டும் என்றாா்.
கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையைக் கருத்தில்கொண்டு ராணுவ வீரா்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. அதேபோல வீரா்களின் பெற்றோா்களையும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கவில்லை.