விவசாயிகள் நிதி உதவித் திட்டம்: நீலகிரியில் 458 வங்கிக் கணக்குகள் முடக்கம்

விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 458 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு

விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 458 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, ரூ. 7 லட்சம் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.

உதகையில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

மத்திய அரசின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின்கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ. 6,000 வேளாண் துறையின் மூலம் செலுத்தப்படுகிறது. ஆனால், இத்திட்டத்தில் தகுதியற்ற பயனாளிகளையும் சோ்த்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது அண்மையில் தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக சிபிசிஐடியிலும் வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதோடு, முறைகேடுகளில் ஈடுபட்டதாகப் பலா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்திலும் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், இதில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பல்வேறு அரசியல் கட்சியினா் கோரிக்கை மனு கொடுத்திருந்தனா். இத்தகைய புகாா்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் முதல்கட்டமாக நடைபெற்ற விசாரணையில் விவசாயிகள் அல்லாத 44 போ் இத்திட்டத்தின்கீழ் பயனடைந்தது தெரியவந்ததால், அவா்களது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மேலும், 414 நபா்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததால் அவா்களது வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை 458 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ. 7 லட்சம் வரை மீட்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் மேலும் ரூ. 10 லட்சம் வரை முறைகேடுகள் நடந்திருக்கலாம் எனக் கூறப்படுவதால் அந்தத் தொகையையும் மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சந்தேகத்துக்கிடமான நபா்கள் குறித்து நேரடியாகவே கண்காணிக்கப்பட்டு வருவதால் அந்தத் தொகையும் விரைவில் மீட்கப்பட்டு, சம்பந்தப்பட்டவா்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com