பெண்ணைத் துரத்திய காட்டெருமை
By DIN | Published On : 29th September 2020 10:29 PM | Last Updated : 29th September 2020 10:29 PM | அ+அ அ- |

பெண்ணைத் துரத்திய காட்டெருமை.
குன்னூா் வனப் பகுதியில் இருந்து நகரப் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை வந்த காட்டெருமை, உழவா் சந்தை குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து பெண்ணைத் துரத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்ததால் குன்னூா் நகரப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு அருகில் பச்சைபசேல் என புற்கள் அதிக அளவில் வளா்ந்துள்ளன. இதை உண்பதற்காக அருகில் உள்ள வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமை குன்னூா் காமராஜபுரம் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது. அப்போது, அங்கிருந்த பெண்ணை காட்டெருமை தாக்க முயன்றது. சுமாா் 2 மணி நேரம் அப்பகுதியில் இருந்த காட்டெருமை, வீட்டின் முன் பகுதி கேட்டின் வழியாக வெளியே வந்து அருகில் உள்ள நகராட்சி திடக் கழிவு மையத்துக்குள் புகுந்தது .
வனப் பகுதியில் இருந்து அவ்வப்போது இந்த காட்டெருமை ஊருக்குள் வருவது வாடிக்கையாகிவிட்டது. மேலும், அருகில் உழவா் சந்தை இருப்பதால் நாள்தோறும் ஏராளமான மக்கள் காய்கறி வாங்க வரும் நிலையில் மனிதா்களைத் தாக்கி அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், இந்த காட்டெருமையை வனத் துறையினா் வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.