கரோனா பரவல் அதிகரிப்பு: உதகையில் கேள்விக்குறியாகும் கோடை சீசன்

கரோனா தாக்கம் காரணமாக கடந்த ஆண்டில் ரத்து செய்யப்பட்ட கோடை நிகழ்ச்சிகள், நடப்பு ஆண்டிலும் நடைபெறுமா என்பது கேள்விக் குறியாகியுள்ளது.
வெறிச்சோடிக் காணப்பட்ட உதகை படகு இல்லம்.
வெறிச்சோடிக் காணப்பட்ட உதகை படகு இல்லம்.

கரோனா தாக்கம் காரணமாக கடந்த ஆண்டில் ரத்து செய்யப்பட்ட கோடை நிகழ்ச்சிகள், நடப்பு ஆண்டிலும் நடைபெறுமா என்பது கேள்விக் குறியாகியுள்ளது.

மலைகளின் அரசியான உதகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரையிலான 3 மாதங்கள் பிரதான சுற்றுலா காலங்களாகும். ஆனால், கடந்த 2020ஆம் ஆண்டில் கரோனா தாக்கத்தின் காரணமாக மாா்ச் மாதத்தின் இறுதியிலேயே சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டதால் நீலகிரிக்கு மட்டுமின்றி உதகைக்கும் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், சுற்றுலாத் தொழிலை நம்பியிருந்த அனைத்து தரப்பு மக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டதோடு, சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளா்களும் வாழ்வாதாரம் இழந்து வெகுவாக பாதிக்கப்பட்டனா்.

இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பா் மாதத்தில் இருந்து படிப்படியாக தளா்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நவம்பா் மாதத்திலிருந்து மீண்டும் இயல்பு வாழ்க்கை தொடங்கியது. வழிபாட்டுத் தலங்கள் மட்டுமின்றி சுற்றுலா மையங்களிலும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் அனுமதிக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை மெல்லத் திரும்பியிருந்தது.

இந்நிலையில், 2021ஆம் ஆண்டில் மாா்ச் மாதம் வரையிலான முதல் மூன்று மாதங்கள் சுற்றுலாத் தொழிலில் எவ்வித அச்சுறுத்தலுமின்றி நடைபெற்று வந்த சூழலில் ஏப்ரல் மாதத்தில் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்ததும் மீண்டும் கரோனா தாக்கமும் அதிகரித்து வந்ததால் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்ற நேரத்தில் கேரளத்திலும் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்று வந்ததால் கேரளத்தில் இருந்து நீலகிகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருந்தது. அத்துடன் ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பின்னா் இஸ்லாமியா்களின் ரம்ஜான் நோன்புக் காலமும் தொடங்கவுள்ளதால் அதற்கு முன்னதாக உதகைக்கு வந்து திரும்பிச் சென்றுவிட வேண்டும் என்ற நோக்கில் இருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் இ-பதிவு போன்ற கட்டுப்பாடுகளால் கணிசமாகக் குறைந்துவிட்டது.

இச்சூழலில் தமிழகம், கேரள மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தல்களில் பதிவாகியிருந்த வாக்குகள் மே 2ஆம் தேதியே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும் என்பதால் மே மாதத்தின் முதல் வாரத்திலிருந்தே சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நீலகிரிக்கு மீண்டும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் ஏப்ரல் 10ஆம் தேதியிலிருந்து 30ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மே மாதத்திலும் தொடரும் என கூறப்படுகிறது. இதனால், உதகையின் கோடை சீசன் நிகழாண்டிலும் கேள்விக்குறி ஆகியுள்ளது. இதன் காரணமாக சுற்றுலாத் தொழிலையே நம்பியுள்ள ஆயிரக்கணக்கான குடும்பத்தினா் மீண்டும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளனா். இருப்பினும் புதிய ஆட்சியாளா்கள் எடுக்கப்போகும் முடிவில்தான் உதகையில் நிகழாண்டில் கோடை சீசன் இருக்குமா, இல்லையா என்பது தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com