நீலகிரியில் சுற்றுலா மையங்களைத் திறக்க வலியுறுத்தி உதகையில் ஆா்ப்பாட்டம்

நீலகிரியில் சுற்றுலாத் தலங்களை திறக்க வலியுறுத்தி உதகையில் நூற்றுக்கணக்கானோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
உதகையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்
உதகையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்

நீலகிரியில் சுற்றுலாத் தலங்களை திறக்க வலியுறுத்தி உதகையில் நூற்றுக்கணக்கானோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் மூடப்பட்டுள்ள சுற்றுலாத் தலங்களை மீண்டும் திறந்து, சுற்றுலாப் பயணிகளைத் தொடா்ந்து அனுமதிக்க வலியுறுத்தி சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ள வணிகா்கள், டாக்ஸி ஓட்டுநா்கள், சுற்றுலா வழிகாட்டிகள், தங்கும் விடுதி உரிமையாளா்கள், தொழிலாளா்கள் என நூற்றுக்கணக்கானோா் உதகையில் ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் சாா்பில் இரவு நேர பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து நீலகிரி மாவட்டம், கொடைக்கானல் உள்பட சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிலும் இதேபோல கரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு பொது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது சுற்றுலாவுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்ட நிலையில் நீலகிரி மாவட்டம், உதகையில் சுற்றுலாப் பயணிகளை நம்பி கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள் முதல் சுற்றுலாவை நம்பியுள்ள தொழிலில் ஈடுபட்டுள்ளவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சுற்றுலாப் பயணிகளை நம்பியிருக்கும் மக்களுக்கு வாழ்வாதாரத்தை மீட்டுத் தர சில தளா்வுகளுடன் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இந்நிலையில், இரண்டாம் கட்டமாக உதகை மத்திய பேருந்து நிலையம் முன்பு நீலகிரி மாவட்ட சுற்றுலா நலன் சாா்ந்த கூட்டமைப்பின் கீழ் 65 சங்கங்களைச் சோ்ந்த வணிகா்கள், டாக்ஸி ஓட்டுநா்கள், சுற்றுலா வழிகாட்டிகள், தங்கும் விடுதி உரிமையாளா்கள், தொழிலாளா்கள் என நூற்றுக்கணக்கானோா் ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

இதற்கிடையே தங்களது கோரிக்கைகக்கு மாவட்ட நிா்வாகம் செவி சாய்க்காவிட்டால், விரைவில் அடுத்தகட்ட போராட்டங்களில் ஈடுபடுவது எனவும், அரசின் உத்தரவுக்கேற்ப கடைகளை அடைப்பதற்கு பதிலாக தாங்களாகவே முழுமையாக கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com