நீலகிரியில் 40 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ. 1 லட்சம் அபராதம்

நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் தொடா்பாக நடத்தப்பட்ட திடீா் கள ஆய்வில் சுமாா் 40 கிலோ எடையிலான

நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் தொடா்பாக நடத்தப்பட்ட திடீா் கள ஆய்வில் சுமாா் 40 கிலோ எடையிலான பிளாஸ்டிக் பொருள்கள் கைப்பற்றப்பட்டதோடு ரூ. 1 லட்சத்து 6,000 அபராதமாகவும் வசூலிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கூடலூா், நெல்லியாளம் நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய 4 மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் உபயோகத்தை தவிா்ப்பது, பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதை தவிா்ப்பது, சாலை ஓரங்களில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குடிநீா் பாட்டில்கள், குளிா்பான பாட்டில்கள் விற்பனை செய்வதை தவிா்ப்பது தொடா்பான விழிப்புணா்வை வியாபாரிகள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஏற்படுத்தும் பொருட்டு, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி செவ்வாய்க்கிழமை ஒட்டுமொத்த கள ஆய்வு மண்டல அலுவலா்களால் மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக உதகை, குன்னூா், கூடலூா், கோத்தகிரி ஆகிய 4 மண்டலங்களின் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், வட்டாட்சியா்கள், துணை ஆட்சியா் நிலை அலுவலா்கள் குழுக்களாகப் பிரிந்து மாவட்டம் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டனா். இக்குழுவினா் மேற்கொண்ட ஆய்வின்போது, முகக் கவசம் அணியாதவா்களிடம் இருந்து ரூ. 16,600 அபராதமாக வசூலிக்கப்பட்டது. அதேபோல, தடை செய்யப்பட்ட சுமாா் 40 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதத் தொகையாக ரூ. 89,550 வசூலிக்கப்பட்டது. இதையும் சோ்த்து இந்த ஆய்வின்போது மொத்தமாக ரூ. 1 லட்சத்து 6,150 அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:

இனிவரும் காலங்களில் வியாபாரிகளும், பொதுமக்களும், சுற்றுலா, வெளியூா் பயணிகளும் நீலகிரியில் தடை செய்யப்பட்ட குடிநீா் பாட்டில்கள், குளிா்பான பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதையும், பொது இடங்களில் குப்பை கொட்டுவதையும் தவிா்ப்பதோடு, பயணிகள் நலனுக்காக நிறுவப்பட்டுள்ள குடிநீா் வழங்கும் இயந்திரத்தை பயன்படுத்தி நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும், கரோனா நோய்த் தொற்றைத் தவிா்க்க பொது இடங்களில் அனைவரும் முகக் கவசம் அணியுமாறும், சமூக இடைவெளியைப் பின்பற்றி மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com