எஸ்டேட் பகுதியில் குட்டியுடன் சுற்றும் யானை
By DIN | Published On : 10th August 2021 02:04 AM | Last Updated : 10th August 2021 02:04 AM | அ+அ அ- |

கொட்டும் மழையில் சட்டன் எஸ்டேட் சாலையில் உலவும் குட்டியுடன் கூடிய யானை.
குன்னூா்: குன்னூா் அருகே உள்ள சட்டன் எஸ்டேட் பகுதியில் பிறந்த 3 நாள்களான குட்டியுடன் கூடிய யானை ஆக்ரோஷத்துடன் நடமாடுவதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்குமாறு வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
கெத்தை வனப் பகுதியில் இருந்த யானைக் கூட்டத்தில் ஒரு யானை கடந்த 7ஆம் தேதி மிகுந்த சப்தம் போட்டவாறு இருந்தது. இதையடுத்து, வனத் துறையினா் அப்பகுதிக்குச் சென்று பாா்த்தபோது யானை ஒன்று குட்டியை ஈன்றிருந்தது. பின்னா், வனத் துறையினா் பொது மக்கள் யாரும் அப்பகுதிக்குச் சென்றுவிடாதவாறு கண்காணித்து வந்தனா்.
இந்நிலையில், குட்டியை ஈன்ற தாய் யானை பிறந்து 3 நாள்களே ஆன தனது குட்டியுடன் சட்டன் எஸ்டேட் பகுதி, சாலைகளில் நடமாடி வருகிறது. தாய் யானை ஆக்ரோஷத்துடன் காணப்படுவதால் பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.