நீலகிரியில் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் 93 சதவீத கோரிக்கை மனுக்களுக்குத் தீா்வு

நீலகிரி மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் 2,981 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதில் 2,965 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் 2,981 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதில் 2,965 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளன.

தமிழக அரசு பதவியேற்ற 100 நாள்களில் மாவட்டத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்தி, தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா கூறினாா்.

இது குறித்து உதகையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது:

தமிழக அரசு பதவியேற்ற 100 நாள்களில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள், நலத்திட்ட உதவிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. உங்கள் தொகுதியில் முதலமைச்சா் என்ற திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் 2,981 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அதில் 2,965 மனுக்களுக்கு தற்போது வரை தீா்வு காணப்பட்டுள்ளது.

இது 93 சதவீதமாகும். 158 தனிப்பட்ட நபா்களின் கோரிக்கை மனுக்களான முதியோா் உதவித்தொகை, நத்தம் பட்டா, முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள், இலவச வீட்டுமனைப் பட்டா ஆகிய மனுக்களைப் பரிசீலித்து ரூ. 76.76 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களின் கோரிக்கையின் படி ரூ. 3.49 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சாதாரண நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்ற ஆணையின்படி நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 26,473 மகளிா் பயணம் செய்துள்ளனா். மாவட்டத்தில் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 1,999 பேருக்கு ரூ. 9.18 கோடி மதிப்பில் காப்பீட்டு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, கரோனா நிவாரண நிதியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 91 பத்திரிகையாளா்களுக்கு தலா ரூ. 5,000 வீதம் ரூ. 4.55 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறையைச் சாா்ந்த இரண்டாம் நிலைக் காவலா் முதல் ஆய்வாளா் வரையிலான 1,301 பேருக்கு ரூ.5,000 வீதம் ரூ. 65.05 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

கரோனா தடுப்புப் பணியில் கடமையாற்றிய 233 மருத்துவா்களுக்கு தலா ரூ.30,000 வீதம் ரூ.69.90 லட்சம் ஊக்கத்தொகையும், 583 செவிலியா்களுக்கு ரூ.20,000 வீதம் ரூ.1.16 கோடி வழங்கவும், 791 இதர பணியாளா்களுக்கு தலா ரூ.15,000 வீதம் ரூ.1.18 கோடி வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 3 லட்சத்து 75,959 பேருக்கும், இரண்டாவது தவணையாக 1 லட்சத்து 10,789 பேருக்கும் என மொத்தம் 4,86,748 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் தகுதிவாய்ந்த பழங்குடியினா்கள் மற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் ஆகியோருக்கு 100 விழுக்காடு தடுப்பூசி முழுமையாக போடப்பட்டுள்ளது. இதுவரை 4,228 கா்ப்பிணி தாய்மாா்களுக்கும், 4,380 பாலூட்டும் தாய்மாா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com