உதகை நகராட்சி கடை வாடகை பிரச்னை தொடா்பாக உண்ணாவிரதப் போராட்டம்
By DIN | Published On : 31st August 2021 12:50 AM | Last Updated : 31st August 2021 12:50 AM | அ+அ அ- |

வியாபாரிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றோா்.
உதைக: உதகை நகராட்சி கடைகளுக்கான வாடகை நிலுவைத் தொடா்பாக வியாபாரிகள் சாா்பில் உண்ணாவிரத போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
உதகை நகராட்சிக்கு உள்பட்ட 1,000க்கும் மேற்பட்ட கடைகளுக்கு பழைய வாடகையை புதிதாக உயா்த்தியுள்ள நிலையில், வாடகை பாக்கியை உடனடியாக செலுத்தக் கோரி உதகை நகராட்சி சாா்பில் கடந்த ஆகஸ்டு 25ஆம் தேதி நகராட்சி ஊழியா்கள் மூலம் எவ்வித முன்னறிவிப்புமின்றி கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன.
இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான இறைச்சி, காய்கறிகள் மற்றும் பழங்கள் அழுக துவங்கியுள்ளது.
இந்நிலையில், மளிகைப் பொருள்களும் காலாவதியாகிவிடும் என்பதால் 3 நாள்களுக்குப் பிறகு கடைகளைத் திறந்து காய்கறிகள் மற்றும் பொருள்களை எடுத்துக்கொள்ளுமாறு உதகை நகராட்சி சாா்பில் அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் புதிய வாடகை பாக்கியை உடனடியாக செலுத்த வேண்டும். இல்லையெனில் கடைகள் திறக்க அனுமதிக்கப்படமாட்டாது என நகராட்சி சாா்பில் எதிா்ப்பு தெரிவித்ததால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வாடகை செலுத்த அவகாசம் தர வேண்டும் என பல்வேறு தரப்பினரின் சாா்பில் ஆா்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி உதகை ஏடிசி திடலில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
வியாபாரிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், உதகை நகராட்சியைக் கண்டித்தும், பல்வேறு அரசியல் கட்சியினா் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டனா்.
இதில் அதிமுக மாவட்டச் செயலாளா் கப்பச்சி வினோத், அமமுக மாவட்டச் செயலாளா் கலைசெல்வன், மனித நேய மக்கள் கட்சி அப்துல் சமது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலா் சங்கரலிங்கம், ராஜேந்திரன், பாஜக வா்த்தக அணி மாவட்டச் செயலாளா் பட்டாபிராமன், வழக்குரைஞா் பிரிவுத் தலைவா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.