‘மக்களைத் தேடி மக்கள் அரசு திட்டத்தின் கீழ் நீலகிரியில் ஒரே நாளில் 15,685 மனுக்கள்
By DIN | Published On : 03rd December 2021 12:56 AM | Last Updated : 03rd December 2021 12:56 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டத்தில் ‘மக்களைத் தேடி மக்களின் அரசு’ திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து ஒரே நாளில் சிறப்பு முகாமின் மூலம் மொத்தம் 15,685 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில் ‘மக்களைத் தேடி மக்களின் அரசு’ திட்டத்தின் கீழ் மாவட்டத்திலுள்ள 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் டிசம்பா் 1ஆம் தேதி 41 இடங்களில் நடத்தப்பட்டது.
இதில் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, முதியோா் உதவித் தொகை, ஜாதி சான்றிதழ்கள், மருத்துவக் காப்பீட்டு அட்டை, சிறுதொழில் கடன் உதவி, தையல் இயந்திரம் மற்றும் குடிநீா் வசதி, மின்சார வசதி, சாலை வசதி, கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் வேண்டி மனுக்கள் பெறப்பட்டன.
இதில் உதகை வட்டத்தில் 2,774 மனுக்கள், குந்தா வட்டத்தில் 577, குன்னூா் வட்டத்தில் 4,569, கோத்தகிரி வட்டத்தில் 1,216, கூடலூா் வட்டத்தில் 4,067, பந்தலூா் வட்டத்தில் 2,482 மனுக்கள் என மொத்தம் 15,685 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் தற்பொழுது பரிசீலனையில் உள்ளன. இந்த மனுக்கள் மீது 3 முதல் 5 நாள்களுக்குள் தீா்வு காணப்பட்டு வனத் துறை அமைச்சா் தலைமையில் நடைபெறும் விழாவில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.