அருங்காட்சியகத் திறப்பு விழாவுக்கு வந்தபோது விபத்து

குன்னூா் அருகே காட்டேரி பகுதியில் ஹெலிகாப்டா் விபத்தில் சிக்கி விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படை தலைமைத் தளபதி

குன்னூா் அருகே காட்டேரி பகுதியில் ஹெலிகாப்டா் விபத்தில் சிக்கி விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத் வெலிங்டன் ராணுவ மையத்தில் பயிற்சி அதிகாரிகளுக்கு உரை நிகழ்த்துவதோடு மட்டுமல்லாமல், சா்தாா் வல்லபபாய் படேல் நினைவு அருங்காட்சியகத் திறப்பு விழா, பயிற்சி அதிகாரிகளுக்கான அா்ஜுன் சிறப்பு அரங்கம் ஆகியவற்றைத் திறந்துவைப்பதற்காகவே வெலிங்டனுக்கு வருகை தர ஒப்புதல் அளித்துள்ளாா். ஆனால், அவரது திடீா் மறைவால் இந்த நிகழ்வுகள் ஏதும் நடைபெறவில்லை.

வெலிங்டனில் ராணுவ மையத்தோடு, ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியும் அமைந்துள்ளது. இங்கு இந்தியாவுடனான நட்பு நாடுகளாகக் கருதப்படும் 40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த 400க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ராணுவப் பயிற்சி பெற்று வருகின்றனா். இவா்களில் 10 சதவீதத்தினா் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா, ஆப்பிரிக்க நாடுகளைச் சோ்ந்தோராவா்.

இப்பயிற்சி அதிகாரிகளுக்காக ஆண்டுதோறும் 30 விரிவுரைகளும், 4 கருத்தரங்குகளும், 10க்கும் மேற்பட்ட பயிற்சிப் பட்டறைகளும் நடத்தப்படும். இவற்றில் இந்திய குடியரசுத் தலைவா் முதல் பாதுகாப்புத் துறை அமைச்சா், முப்படைகளின் தளபதிகள், முப்படைகளின் மண்டலத் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்பது வழக்கமாகும்.

அதேபோல, வெலிங்டன் ராணுவ மைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சா்தாா் வல்லபபாய் படேல் நினைவு அருங்காட்சியகத்தைத் திறப்பதற்காகவும், பயிற்சி ராணுவ அதிகாரிகளுக்கான சிறப்பு அரங்கைத் திறந்துவைப்பதற்காகவும் நேரம் ஒதுக்கியதோடு, பயிற்சி அதிகாரிகளுக்கான விரிவுரையாற்றவும் விபின் ராவத் ஒப்புக் கொண்டுள்ளாா்.

இவா் ஏற்கெனவே இந்திய ராணுவத் தளபதியாக இருந்தபோதும், முப்படைகளின் தலைமைத் தளபதியாக இருந்தபோதும் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு வந்துள்ள நிலையில் மூன்றாவது முறையாகவும் வருவதற்கு ஒப்புக் கொண்டிருந்தபோதுதான் இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com