முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் கனரக வாகனங்களுக்குத் தடை
By DIN | Published On : 19th December 2021 11:19 PM | Last Updated : 19th December 2021 11:19 PM | அ+அ அ- |

குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணி.
குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் கனரக வாகனங்கள் கோத்தகிரி வழியாகத் திருப்பிவிடப்பட்டுள்ளன.
குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஒரு மாதத்திற்கும் மேலாக 17 இடங்களில் சாலையை விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், காட்டேரி பூங்காவில் இருந்து அரை கி.மீ. தொலைவில் சாலையில் சனிக்கிழமை மாலை திடீரென விரிசல் ஏற்பட்டது.
இதனால், இரு சக்கர வாகனங்கள், காா்கள் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள், அரசுப் பேருந்துகள் தவிர மற்ற காய்கறி லாரிகள், கட்டுமானப் பொருள்கள் ஏற்றி வரும் கனரக வாகனங்கள், அதிக எடை ஏற்றி வரும் லாரிகள் ஆகியவை பாதுகாப்பு கருதி கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையத்திற்கு அனுப்பப்பட்டன.
விரிசல் ஏற்பட்ட இடத்தில் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைத் துறை உயா் அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்தை ஆய்வு செய்து , அதன் பின்னா் தரும் அறிக்கையைக் கொண்டு, குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் கனரக வாகனங்களை அனுமதிப்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாக போக்குவரத்துக் காவல் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.