கோத்தகிரியில் காட்டெருமைக் குட்டி பலி
By DIN | Published On : 06th February 2021 10:00 PM | Last Updated : 06th February 2021 10:00 PM | அ+அ அ- |

குன்னூா்: கோத்தகிரியில் காட்டெருமைக் குட்டி இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத் துறையினா் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
கோத்தகிரி, காம்பைக் கடை பகுதியில் காட்டெருமைக் குட்டி இறந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். தகவலின்பேரில் கோத்தகிரி வனச் சரகா் செல்வகுமாா், வனவா் சக்திவேல், வனக் காப்பாளா் வீரமணி, வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்துகிடந்த காட்டெருமைக் குட்டியின் உடலை ஆய்வு செய்தனா்.
பின்னா், கால்நடை மருத்துவா் ராஜன் வரவழைக்கப்பட்டு இறந்த காட்டெருமைக் குட்டிக்கு உடல்கூராய்வு ஆய்வு செய்யப்பட்டது. பின்னா் அதே பகுதியில் புதைக்கப்பட்டது. இறந்துபோன காட்டெருமைக் குட்டி ஒன்றரை வயதுள்ள ஆண் எனவும், அதன் இறப்புக்கான காரணம் குறித்து உடற்கூராய்வு முடிவுகள் வந்த பின்னரே தெரியவரும் என்றும் தெரிவித்தனா்.