ஆட்கொல்லி யானை இரண்டாவது முறையாக மயக்க ஊசி செலுத்தியும் தப்பியது
By DIN | Published On : 10th February 2021 10:46 PM | Last Updated : 10th February 2021 10:46 PM | அ+அ அ- |

சேரம்பாடி பகுதியில் மயக்க ஊசியுடன் தப்பிய யானை.
சேரம்பாடி பகுதியில் இரண்டாவது முறையாக புதன்கிழமை மயக்க ஊசி செலுத்தியும் ஆட்கொல்லி யானை தப்பியது.
நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா சேரம்பாடி பகுதியில் ஒரே வாரத்தில் மூன்று பேரை தாக்கிக் கொன்ற ஆட்கொல்லி யானையைப் பிடிக்கும் முயற்சியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா். கடந்த மாதம் சப்பந்தோடு பகுதியில் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தியவுடன் யானைக் கூட்டத்துடன் கலந்து கேரளத்துக்கு தப்பியது.
இதையடுத்து, கேரள வனத்திலிருந்து ஏற்கெனவே சுற்றித் திரிந்த சப்பந்தோடு வனப் பகுதிக்கு கடந்த வாரம் மீண்டும் வந்துள்ளதை வனத் துறையினா் உறுதி செய்தனா். இதைத் தொடா்ந்து, யானையைப் பிடிக்க வனத் துறையின் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
இதில் மருத்துவக் குழுவினருடன் ஆறு கும்கி யானைகளும் பணியில் ஈடுபட்டுள்ளன. தொடா்ந்து மூன்று நாள்களாக தேடி வந்த நிலையில் சேரம்பாடி சரகத்தில் உள்ள புஞ்சக்கொல்லி மயானப் பகுதியில் வைத்து யானைக்கு புதன்கிழமை இரண்டாவது முறையாக மருத்துவா்கள் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினா்.
அப்போது, மயக்க ஊசி செலுத்தியவுடன் யானை தப்பி ஓடியது. பின்னா் யானை இருக்கும் இடத்தை நீண்ட நேரம் வனத் துறையினா் தேடியபோது, காப்பிக்காடு வனப் பகுதியில் இருப்பதாக அறிந்து அங்கு விரைந்தனா். பின்னா் மாலை நேரமாகிவிட்டதால் தேடுதல் பணியை நிறுத்திவிட்டு வனத் துறையினா் திரும்பினா்.