முதுமலையில் ஆட்கொல்லி யானை அடைப்பு
By DIN | Published On : 13th February 2021 10:54 PM | Last Updated : 13th February 2021 10:54 PM | அ+அ அ- |

கூண்டிலிருந்து தும்பிக்கையை வெளியே நீட்டும் ஆட்கொல்லி யானை.
கூடலூா்: சேரம்பாடி பகுதியில் பிடிபட்ட ஆட்கொல்லி யானை, முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கராலில் (கூண்டு) வெள்ளிக்கிழமை இரவு அடைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகாவில் உள்ள சேரம்பாடி பகுதியில் கடந்த ஒரு வார காலமாக தேடப்பட்டு வந்த ஆட்கொல்லி யானை வெள்ளிக்கிழமை மாலை பிடிபட்டது. அந்த யானையை கும்கி யானைகளின் உதவியுடன் லாரியில் ஏற்றி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு வந்து அபயாரண்யம் முகாமுக்கு அருகே யானைகளை அடைக்கும் பிரத்யேகமான கரால் எனப்படும் கூண்டில் அடைத்தனா்.
அந்த யானையை மருத்துவக் குழுவினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். யானையின் உடல் நிலையைப் பரிசோதித்து பரிந்துரைக்கப்படும் உணவு மட்டுமே வழங்கப்படுகிறது. அதற்கென தனியாகப் பாகன்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இந்த யானை கூண்டில் இருக்க மறுத்து அட்டகாசம் செய்து வருகிறது. குறைந்தது ஒரு மாத காலத்துக்கு கரால் கூண்டில் வைத்து கும்கிகளை வைத்துப் பயிற்சி அளிக்க முயற்சிக்கப்படும். ஒரு மாதத்தில் இந்த யானை சமாதானமாகிவிடும் என்றும், அதன் பிறகு அதற்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் வனத் துறையினா் கூறினா்.