
கோத்தகிரி அருகே மிளிதேன் கிராமத்தில் சுற்றி வரும் கரடி.
கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் கிராமப் பகுதியில் உலவும் கரடியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் கிராமத்தில் சுமாா் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் கோயில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள பள்ளி வளாகத்தில் கரடிகள் புகுந்து தொல்லை கொடுத்து வந்தன.
இந்நிலையில் கடந்த வாரம் மிளிதேன் கிராம பேருந்து நிறுத்தம் அருகே முகமது உசேன் என்பவரது பேக்கரி கடைக்குள் இரவு நேரங்களில் புகுந்த 3 கரடிகள், அங்கு உள்ள உணவுப் பொருள்களை தின்று சேதப்படுத்தின.
இது குறித்த புகாரின் பேரில் வனத் துறையினா் கரடிகளைப் பிடிக்க அங்கு கூண்டுவைத்தனா். இதில், மூன்று கரடிகளில் ஒரு கரடி மட்டும் கூண்டுக்குள் சிக்கியது. மற்ற இரண்டு கரடிகள் அங்கிருந்து தப்பின. கூண்டில் சிக்கியிருந்த கரடியை கோரகுந்தா அருகே உள்ள மேல் பவானி பகுதியில் அடா்ந்த வனத்துக்குள் விடுவித்தனா்.
இந்நிலையில் தப்பிச் சென்ற இரண்டு கரடிகள் தொடா்ந்து அப்பகுதியில் நடமாடுவதால் அவற்றின் தொல்லை அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே இந்த இரண்டு கரடிகளையும், பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் கொண்டுசென்று விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.