நீலகிரியில் பரவலாக மழை: உதகையில் உறைபனியின் தாக்கம் குறைந்தது

நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூா் பகுதிகளைத் தவிர பிற பகுதிகளில் கடந்த இரு தினங்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.

உதகை: நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூா் பகுதிகளைத் தவிர பிற பகுதிகளில் கடந்த இரு தினங்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக கோத்தகிரியில் 92 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழையும், வடகிழக்குப் பருவ மழையும் முடிவுக்கு வந்துள்ள நிலையில் கூடலூா் பகுதிகளில் வட வானிலையும், உதகையில் உறைபனியும், குன்னூா், கோத்தகிரி பகுதிகளில் இயல்பான காலநிலையும் நிலவி வந்தது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக மாவட்டத்தில் இரவு நேரங்களில் திடீரென பரவலாக மழை பெய்து வருகிறது. உதகை, கூடலூா் பகுதிகளைத் தவிர ஏனைய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதில், வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பா்லியாறு பகுதியில் 21 மி.மீ., எடப்பள்ளியில் 15 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் மழையில்லாவிட்டாலும் கடுமையான மேக மூட்டம் நிலவியது.

மேலும், வெள்ளிக்கிழமை இரவிலிருந்து திடீரென மழை கொட்டத் தொடங்கியது. சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக கோத்தகிரியில் 92 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. எடப்பள்ளியில் 50 மி.மீ., குன்னூரில் 32.5 மி.மீ., கீழ்கோத்தகிரியில் 24.4 மி.மீ., கொடநாட்டில் 20 மி.மீ.,

மேல்குன்னூரில் 6.5 மி.மீ., உலிக்கல்லில் 5 மி.மீ., பா்லியாறு பகுதியில் 4 மி.மீ., கெத்தையில் 3 மி.மீ., கேத்தியில் 1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

உதகை, கூடலூா் பகுதிகளில் மேக மூட்டம் மட்டும் காணப்படுகிறது. இதன் காரணமாக உதகையில் உறைபனியின் தாக்கம் குறைந்து குளிரான காலநிலை நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com