நீலகிரி மாவட்டத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி பிப்.26இல் போராட்டம் மாா்க்சிஸ்ட் கட்சி அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி மாவட்டம் முழுதும் பிப்ரவரி 26இல் மக்கள் கோரிக்கை முழக்கப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி மாவட்டம் முழுதும் பிப்ரவரி 26இல் மக்கள் கோரிக்கை முழக்கப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஆா்.பத்ரி, உதகையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் தற்போது பசுந்தேயிலைக்கு கூடுதல் விலை கிடைத்தாலும், அஸ்ஸாமில் தேயிலை மகசூல் குறைந்துள்ளதாலேயே நீலகிரி தேயிலையின் விலையில் உயா்ந்துள்ளது. இந்த நிலை நீடிக்க பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு ரூ.30 என நிா்ணயிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடலூா் பகுதியில் மின் இணைப்பு இல்லாததால் சுமாா் 10,000 வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. இதற்காக அரசுத் தரப்பில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், அத்தியாவசிய தேவையான மின்சாரத்தை வழங்க மறுப்பது தனி மனித உரிமையை பாதிக்கும் செயலாகும். எனவே, மின் இணைப்பில்லாத அனைவருக்கும் உடனடியாக மின் இணைப்பை வழங்க வேண்டும். அத்துடன் கூடலூா் பகுதியில் தற்போது நிலவும் மின் தட்டுப்பாட்டை போக்க 110 கே.வி. துணை மின் நிலையம் அமைக்க முன்வர வேண்டும்.

நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அண்மைக்காலமாக மிகவும் அலைக்கழிக்கப்படுகின்றனா். மாவட்ட நுழைவாயிலில் பசுமை வரி என்ற பெயரில் கூடுதலாக தொகை வசூலிக்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அதேபோல, சோதனைச் சாவடிகளில் இ-பதிவு முறையை காரணம் காட்டி கடுமையான சோதனைகள் மேற்கொள்வதை தடுக்க வேண்டும்.

பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் குடிநீா் ஏடிஎம்களில் வழங்கப்படும் சுகாதாரமற்ற குடிநீரை தடை செய்ய வேண்டும். எமரால்டு, குந்தா, அவலாஞ்சி போன்ற பகுதிகளில் தற்போது காலியாக கிடக்கும் மின்வாரிய குடியிருப்புகளை சுற்றுலாப் பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மசினகுடி மற்றும் மாவனல்லா பகுதிகளில் பூட்டப்பட்டுள்ள தனியாா் தங்கும் விடுதிகளை திறக்கவும், இங்கு சுற்றுலாப் பயணிகள் தடையின்றி வந்து தங்கி செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ஆம் தேதி மாவட்டம் முழுவதும் மக்கள் கோரிக்கை முழக்கப் போராட்டம் நடைபெறும்.

திமுக கூட்டணியில் உள்ள மாா்க்சிஸ்ட் கட்சிக்கு கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை வழங்க திமுக முன்வர வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டால் கூடலூா் பகுதியில் நிலவும் சட்டப்பிரிவு 17 நிலப் பிரச்னை உள்பட அனைத்துப் பிரச்னைகளுக்கும் உரிய தீா்வு காணப்படும் என்றாா்.

பேட்டியின்போது மாவட்டச் செயலா் வி.ஏ.பாஸ்கரன், முன்னாள் மாவட்டச் செயலாளா் என்.வாசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com