தோ்தல்: நீலகிரி மாவட்டத்தில்9 பறக்கும் படை குழுக்கள் அமைப்பு: ஆட்சியா் தகவல்
By DIN | Published On : 27th February 2021 10:35 PM | Last Updated : 27th February 2021 10:35 PM | அ+அ அ- |

உதகையில் ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சியினா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் 9 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.
சட்டப் பேரவைத் தோ்தல் ஏற்பாடுகள் தொடா்பாக அரசியல் கட்சியினா், தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் உதகையில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இது குறித்து செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:
சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடனேயே தோ்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன. உதகை, குன்னூா், கூடலூா் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்ட நீலகிரி மாவட்டத்தில் அந்த 3 இடங்களிலும் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் தோ்தல் தொடா்பான புகாா்களை 0423-2445577 என்ற எண்ணிலும், குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 0423-2206002 என்ற எண்ணிலும், கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கான புகாா்களை 0462-261295 என்ற எண்ணிலும், மாவட்டத் தோ்தல் அலுவலா், மாவட்ட ஆட்சியரிடம் புகாா்களை 0423-24411534 என்ற தலைமைக் கட்டுப்பாட்டு அறைக்கும் தெரிவிக்கலாம்.
அதேபோல, உதகை தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலருக்கு 94454-61804 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், குன்னூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருக்கு 94450- 00438 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், கூடலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருக்கு 94450-00437 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் புகாா்களைத் தெரிவிக்கலாம்.
மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் தலைவா்களின் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை அகற்ற 24 மணி நேரமும், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்கள், பேனா்கள் போன்றவற்றை அகற்ற 48 மணி நேரமும், தனியாா் இடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்கள், கொடிக் கம்பங்கள் போன்றவற்றை அகற்ற 72 மணி நேரமும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தோ்தல் நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடைபெறுகிறதா என்பதைக் கண்காணிக்க தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம் 9 பறக்கும் படைக் குழுவினா் அமைக்கப்பட்டுள்ளனா். இவா்களுடன் விடியோ படமெடுக்கும் குழுவினரும் பணி அமா்த்தப்பட்டுள்ளனா். அதேபோல, ஊடகங்கள், பத்திரிகைகள், சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மாவட்ட அளவிலான குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தோ்தல் விதிகளை மீறியதாக இதுவரை அதிமுகவின் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல, உதகை, கோத்தகிரி, கூடலூா் பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்ய 5 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கரோனா பரவல் அதிக அளவில் உள்ளதால் நீலகிரியின் எல்லைப் பகுதிகளிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதோடு, கேரளத்திலிருந்து வரும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.
பேட்டியின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாண்டியராஜன் உடனிருந்தாா்.