நீலகிரியில் 67% அரசுப் பேருந்துகள் இயக்கம்
By DIN | Published On : 27th February 2021 05:58 AM | Last Updated : 27th February 2021 05:58 AM | அ+அ அ- |

உதகை-குன்னூா் வழித்தடத்தில் எல்லநள்ளி பகுதியில் அரசுப் பேருந்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களின் போராட்டத்தின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை 67 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனா்.
மாவட்டத்தில் மொத்தமுள்ள 400 அரசுப் பேருந்துகளில் 10 சதவீத அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தனா். கிராமப் பகுதிகளிலிருந்து உதகைக்கு யாரும் வர முடியாத சூழல் இருந்தது. இதன் காரணமாக தனியாா் சிற்றுந்துகளிலும், வாடகை வாகனங்களிலும் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிகள் உதகை வந்தனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்துகளில் 67 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. தற்காலிக ஊழியா்களைக் கொண்டு இப்பேருந்துகள் இயக்கப்பட்டன.
உதகையிலிருந்து கேரளம், கா்நாடக மாநிலங்களுக்கும் கல்லட்டி மலைப் பாதை வழியாக செல்லும் பேருந்துகளைத் தவிர ஏனைய அனைத்து வழித்தடங்களிலும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல, உதகை, காந்தல் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் நகரப் பேருந்துகளும் வழக்கம்போல இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே உதகை- குன்னூா் வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா பேருந்திலிருந்த பயணிகளிடம் கரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து வலியுறுத்தினாா்.