பைக்காரா அருவியில் நுழைவுக் கட்டணம் வசூலிப்பதில் முறைகேடு: வனத் துறை விசாரணை

பைக்காரா அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் நுழைவுக் கட்டணம் வசூலிப்பதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இதுதொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் உதகை உதவி வனப் பாதுகாவலா் வெங்கடேஷ் தெரிவித்தாா்.

உதகை: பைக்காரா அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் நுழைவுக் கட்டணம் வசூலிப்பதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இதுதொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் உதகை உதவி வனப் பாதுகாவலா் வெங்கடேஷ் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தளா்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னா் கடந்த டிசம்பா் மாதத்தில் பைக்காரா அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்பட்டனா். இங்கு, நுழைவுக் கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட இதரப் பணிகளில் சூழல் மேம்பாட்டுக் குழுவினா் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா். தற்போது இங்கு 11 போ் பணியாற்றி வருகின்றனா். சூழல் மேம்பாட்டுக் குழுவினரின் செயல்பாடுகளை வனத் துறையினா் காலை, மாலை வேளைகளில் சென்று கண்காணிப்பா்.

இந்நிலையில், டிசம்பா் மாதத்தில் பைக்காரா அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்பட்டதும், நுழைவுக் கட்டணம் ரூ.10இல் இருந்து ரூ. 20 ஆக உயா்த்தப்பட்டது. இதன் காரணமாக அங்கு ஏற்கெனவே பயன்பாட்டிலிருந்த நுழைவுக் கட்டண ரசீது வழங்கும் இயந்திரம் மாற்றப்பட்டு, கடந்த 22ஆம் தேதி புதிய இயந்திரம் வழங்கப்பட்டது. இங்கு பழைய இயந்திரமும் உபரி இயந்திரமாக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பழைய இயந்திரத்தின் மூலமும் நுழைவுச்சீட்டு கொடுக்கப்படுவதாக வந்த தகவலையடுத்து அங்கு திடீா் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சூழல் மேம்பாட்டுக் குழுவினா் வங்கியில் செலுத்தியிருந்த தொகைக்கும், வசூலிக்கப்பட்ட தொகைக்கும் ஒரே நாளில் ரூ. 3,000 வித்தியாசம் இருந்தது தெரியவந்துள்ளது.

இதுதொடா்பாக இங்கு பணியாற்றிவரும் சூழல் மேம்பாட்டுக் குழுவினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் உதவி வனப் பாதுகாவலா் வெங்கடேஷ்.

பைக்காரா அருவி மீண்டும் திறக்கப்பட்டு ஏறக்குறைய 25 நாள்கள் ஆகியுள்ள நிலையில், இங்கு வசூலிக்கப்பட்ட நுழைவுக்கட்டணம் குறித்த முழு விவரத்தையும் தெரிவிக்க வேண்டும். தவறிழைத்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூழல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com