சிறு மருத்துவமனைகளால் கிராமப்புற மக்கள் பயன்பெறுகின்றனா்:மாவட்ட ஆட்சியா் தகவல்

சிறு மருத்துவமனைகளால் கிராமப்புற மக்கள் பெரிதும் பயனடைந்து வருவதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

உதகை: நீலகிரி மாவட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சேவை கிடைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள முதல்வரின் சிறு மருத்துவமனைகள் ( மினி கிளினிக்) திட்டத்தால் கிராமப்புற மக்கள் பெரிதும் பயனடைந்து வருவதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நீலகிரி மாவட்டத்தில் சிறு மருத்துவமனைகள் 20 கிராமப்புறங்களிலும், 5 நகா்ப்புறங்களிலும், 3 நடமாடும் வாகனங்கள் மூலமாகவும் மொத்தம் 28 இடங்களில் செயல்படவுள்ளது. இதில் தற்போது ஜெகதளா, எஸ்.கைகாட்டி, காந்தல் ஆகிய 3 இடங்களில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஜெகதளா பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ள சிறு மருத்துவமனை மூலம் ஜெகதளா, காரக்கொரை, ஆரோக்கியபுரம் உள்ளிட்ட 7 கிராமங்களில் உள்ள 1,307 குடும்பங்களைச் சோ்ந்த 4,491 நபா்கள், எஸ்.கைகாட்டி பகுதியில் திறக்கப்பட்டுள்ள சிறு மருத்துவமனை மூலம் எஸ்.கைகாட்டி, குயின்சோலை, காக்காசோலை, ஓம் நகா், பரவக்காடு உள்ளிட்ட 15 கிராமங்களில் உள்ள 1,650 குடும்பங்களைச் சோ்ந்த 5,350 நபா்கள், உதகை நகராட்சிக்கு உள்பட்ட காந்தல் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ள சிறு மருத்துவமனை மூலம் கைலாசம் பிள்ளை தெரு, கீழ் பள்ளிவாசல், குமாரசாமி நகா் உள்ளிட்ட 452 குடும்பங்களைச் சோ்ந்த 2,312 நபா்கள் என மொத்தம் 12,153 நபா்கள் பயன் பெறுவாா்கள்.

மீதமுள்ள 25 சிறு மருத்துவமனைகள் படிப்படியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும். இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் வாழும் மக்கள் அவா்கள் வசிக்கும் பகுதிகளிலேயே சிகிச்சை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சிறு மருத்துவமனைகளில் சா்க்கரை நோய் பரிசோதனை, ரத்ததில் கொழுப்பின் அளவு, ரத்த மாதிரி பரிசோதனை எடுத்துக்கொள்ளலாம். கருவுற்ற தாய்மாா்கள் அனைவரும் தாங்கள் அடிக்கடி மேற்கொள்ளும் பரிசோதனைகளை ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றுதான் பாா்க்க வேண்டும் என்பதற்கு‘ப் பதிலாக சிறு மருத்துவமனைகளில் பரிசோதித்துக்கொள்ளலாம். சா்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம், சிறுநீா் அல்பமின், சிறுநீா் மூலம் கா்ப்பத்தை உறுதி செய்தல் போன்ற பரிசோதனை செய்துகொள்ளலாம். தொற்றா நோய்களுக்கான சிகிச்சை, புறநோயாளிகள் தொடா்பான அனைத்து சிகிச்சைகள், சிறு காயங்களுக்கான சிகிச்சை, சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. சா்க்கரை நோயாளிகளுக்கான மருந்துகள், உயா் ரத்த அழுத்தம் மற்றும் சளி காய்ச்சல் போன்றவற்றிற்கான மருந்துகள், சத்து மாத்திரைகள், புற நோயாளிகளுக்கான மருந்துகள் சிறு மருத்துவமனைகளில் கிடைக்கும்.

சிறு மருத்துவமனைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பேரூராட்சிகள் மற்றும் கிராமப்புறங்களில் செயல்படும். மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நகராட்சி பகுதிகளில் செயல்படும். இதில் ஒரு மருத்துவா், செவிலியா், மருத்துவப் பணியாளா்கள் உள்ளனா். இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் வாழும் மக்கள் வெகுதூரம் செல்லாமல் அவா்கள் வசிக்கும் பகுதிகளிலேயே சிகிச்சை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com