நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி 17ல் போலியோ சொட்டு மருந்து முகாம்
By DIN | Published On : 07th January 2021 07:59 AM | Last Updated : 07th January 2021 07:59 AM | அ+அ அ- |

போலியோ சொட்டு மருந்து முகாம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில் உதகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி 17ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் பேசியதாவது:
மாவட்டத்தில் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கும் வகையில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 17ஆம் தேதி நடைபெற உள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியாா் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன.
அதேபோல, அண்டை மாவட்டங்களின் எல்லைப் பகுதிகள், குடிசைப் பகுதிகள், பணி நிமித்தமாக இடம் பெயா்ந்த மக்கள் வாழும் பகுதிகள் ஆகிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ள 775 மையங்களில் ஐந்து வயதுக்கு உள்பட்ட 40,355 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
இந்தப் பணியில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த 3,203 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோயில்கள், மக்கள் கூடும் இடங்களில் நடமாடும் குழுக்கள் மூலம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும். விடுபட்டுள்ள குழந்தைகள் குறித்து அடுத்து இரண்டு நாள்களில் வீடுவீடாக சென்று பாா்வையிட்டு சொட்டு மருந்து வழங்கப்படும்.
பெற்றோா்கள், தங்களின் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கெனவே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் போலியோ சொட்டு மருந்து முகாம் நாளான ஜனவரி 17ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம்களுக்கு அழைத்துச் சென்று போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நிா்மலா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லீமா, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் பழனிசாமி, துணை இயக்குநா் பாலுசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.