
நிகழ்ச்சியில் பிளஸ் 1 மாணவிக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கிய மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா. உடன், மாவட்ட ஊராட்சித் தலைவா் பொன்தோஸ் உள்ளிட்டோா்.
நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு 2020-21ஆம் கல்வி ஆண்டுக்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி உதகையிலுள்ள பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதனை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா பேசியதாவது:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சத்தான உணவு, விலையில்லா புத்தகப் பை, காலணி, பாடப் புத்தகங்கள், மிதிவண்டி, சீருடை, மடிக்கணினி, பேருந்து பயண அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
2020-21 ஆம் கல்வி ஆண்டுக்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள 52 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் 2,056 மாணவா்கள், 2,665 மாணவியா் என மொத்தம் 4,721 மாணவ, மாணவிகளுக்கும் ரூ.1.86 கோடி மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் விரைவில் வழங்கப்படவுள்ளது. அரசுப் பள்ளி மாணவ, மாணவியரின் மருத்துவக் கனவை நனவாக்கும் விதமாக 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக உதகையில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி, தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.
இந்நிகழ்ச்சியில் குன்னூா் சட்டப் பேரவை உறுப்பினா் சாந்தி ராமு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் கப்பச்சி வினோத், மாவட்ட ஊராட்சித் தலைவா் பொன்தோஸ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் நசாருதீன், அரசுத் துறை அலுவலா்கள், ஆசிரியா்கள், பள்ளி மாணவ, மாணவியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.