சாலையில் தேங்கிய மழை நீரில் காகித கப்பல் விடும் போராட்டம்
By DIN | Published On : 15th January 2021 11:10 PM | Last Updated : 15th January 2021 11:10 PM | அ+அ அ- |

திருப்பூா் மாநகராட்சி 36 ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஸ்ரீ பாலாஜி நகரில் தேங்கிய மழை நீரில் கப்பல் விடும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்ட பொது மக்கள்.
திருப்பூா், ஸ்ரீ பாலாஜி நகரில் தேங்கிய மழைநீரில் அப்பகுதி பொது மக்கள் காகித கப்பல் விடும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 36ஆவது வாா்டு முத்தணம்பாளையம் அருகே உள்ள ஸ்ரீ பாலாஜி நகா், குருவாயூரப்பன் நகா், கோடீஸ்வரன் நகா் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்தக் குடியிருப்புகளுக்கு மாநகராட்சி சாா்பில் தாா் சாலை, தெரு விளக்கு, குப்பைத் தொட்டி உள்ளிட்ட எந்தவிமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இது தொடா்பாக அப்பகுதி பொது மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, தங்களது எதிா்ப்புகளை தெரிவிக்கும் வகையில் ஸ்ரீ பாலாஜி நகரில் சாலையில் தேங்கிய மழை நீரில் காகித கப்பல் விடும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இது குறித்து அப்பகுதி பொது மக்கள் கூறியதாவது:
முத்தணம்பாளையம் ஊராட்சியாக இருந்து வந்த எங்களது பகுதி வாா்டு மறுசீரமைப்பின்படி திருப்பூா் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. ஆனால், தற்போது வரையில் எங்களது பகுதி மாநகராட்சியால் அங்கீகரிக்கப்படாததாகவே இருந்து வருகிறது.
இதனால் எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளான தாா் சாலை, தெரு விளக்கு, சாக்கடை வசதி, குப்பைத் தொட்டி, பொது குடிநீா்க் குழாய் உள்ளட்ட வசதிகள் செய்து தர மறுத்து வருகின்றனா்.
மேலும், சாலை மிகவும் மோசமான நிலையில் சேறும் சகதியுமாக உள்ளதால் நடந்தும், வாகனத்திலும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, மாநராட்சி அதிகாரிகளுக்கு எதிா்ப்பைத் தெரிவிக்கும் வகையில் தேங்கிய மழை நீரில் காகித கப்பல் விடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.