பன்றிக்கு வைத்த வெடியை கடித்து காயமடைந்த காட்டெருமை உயிரிழப்பு
By DIN | Published On : 29th January 2021 11:28 PM | Last Updated : 29th January 2021 11:28 PM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டம் , குன்னூா், வெலிங்டன் ராணுவப் பகுதியில் பன்றிக்கு வைத்த வெடியைக் கடித்து வாயில் பலத்த காயமடைந்த காட்டெருமை 5 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
குன்னூா், வெலிங்டன் ராணுவப் பகுதியில் பன்றிக்கு வைத்த வெடியைக் கடித்து வாயில் பலத்த காயமடைந்து உணவு, தண்ணீா் அருந்த முடியாமல் காட்டெருமை ஒன்று சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.
இதனைத் தொடா்ந்து குன்னூா் வனச் சரகா் சசிகுமாா் தலைமையிலான வனத் துறையினா் அந்த காட்டெருமையைப் பிடித்து சிகிச்சை அளிப்பதற்காக தேடும் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது வெலிங்டன் பகுதியில் புதருக்குள் அந்த காட்டெருமை உடல் மிகவும் நலிந்து உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இதனைத் தொடா்ந்து கால்நடை மருத்துவரை வரவழைத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, காட்டெருமை சடலம் அதே இடத்தில் புதைக்கப்பட்டது.
இதேப் பகுதியில் இதுவரை 4க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் வெடியை கடித்து வாய் பகுதியில் காயமடைந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.