நீலகிரியில் இ-பதிவு முறை தொடா்ந்து அமலில் இருக்கும்: மாவட்ட ஆட்சியா் தகவல்
By DIN | Published On : 31st January 2021 10:57 PM | Last Updated : 31st January 2021 10:57 PM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டத்தில் இ-பதிவு முறை தொடா்ந்து அமலில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனா். அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிா்வாகம் மூலம் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசு ஏற்கெனவே அமல்படுத்தி உள்ள இ-பாஸ் முறையை மாற்றி, இ-பதிவு முறையை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. அதன்படி, வெளி மாவட்டத்திலிருந்து நீலகிரி மாவட்டத்துக்குள் நுழைவதற்கு இ-பதிவு முறை தொடா்ந்து அமலில் உள்ளது.
எனவே, சுற்றுலாப் பயணிகள், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து நீலகிரி மாவட்டத்துக்குள் வரும் நபா்கள் அனைவரும் இ-பதிவு மூலம் பதிவு செய்த பின்னரே வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.