நீலகிரிக்குள் வருவதற்கு கரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம்: ஆட்சியா் அறிவிப்பு

வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரிக்குள் வருவோருக்கு கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

உதகை: வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரிக்குள் வருவோருக்கு கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தொடா்ந்து பரவி வரும் நிலையில், முழு பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு தற்போது தளா்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, நீலகிரி மாவட்டம் போன்ற சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல இ-பாஸ் நடைமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களான பூங்காக்கள், படகு இல்லம் உள்ளிட்டவை திறக்கப்படவில்லை. தளா்வின் காரணமாக வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மாவட்டத்தில் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா உதகையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வரும் நீலகிரி மாவட்ட மக்கள், வெளியூா் பயணிகள் கட்டாயமாக இ-பதிவு, கரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுவா். மேலும், கரோனா தொற்று வழிமுறைகளான முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்றவற்றை உள்ளூ, வெளியூா் மக்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படும்.

கேரளத்தில் தற்போது ஜிகா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் தமிழக சுகாதாரத் துறை செயலாளா் இதுகுறித்து வெளியிட்ட நெறிமுறைகளின்படி ஏடிஸ் கொசு மூலம் இந்த வைரஸ் பரவுவதாகத் தெரியவந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தைப் பொருத்தவரை உதகை, குன்னூா், கோத்தகிரி பகுதிகளைவிட கூடலூா் பகுதியில் ஏற்கெனவே டெங்கு பாதிப்பு இருந்துள்ளதால் இதுகுறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும், நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 4 நாள்களுக்கு அதி கன மழை பெய்யும் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ள நிலையில், மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்கள் என கண்டறியப்பட்டுள்ள 283 பகுதிகளுக்கும் 42 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டு அக்குழுக்கள் 24 மணி நேரமும் தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களைத் தங்கவைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் உள்ளன. இப்பணிகளில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினருடன், தீயணைப்புத் துறையினரும் ஈடுபட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com